மட்டக்களப்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
In இலங்கை December 22, 2020 2:36 am GMT 0 Comments 1692 by : Dhackshala
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக தாழ் நிலங்களை அண்டிய கிராமங்களான பழுகாமம் கோவில் போரதீவு, பட்டாபுராம், பெரியபோரதீவு, முனைத்தீவு ஆகிய கிராமங்களில் மழை நீர் உட்புகுந்துள்ளமையினால் மக்களின் வீடுகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான மழை காரணமாக மட்டக்களப்பு மண்டூர் வீதி உட்பட சில பிரதான வீதிகளின் ஊடாகவும் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் சிக்கல் நிலையேற்பட்டுள்ளது.
இதேவேளை போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி, போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் பா.சதிஸ்கரன் ஆகியோர் தலைமையில் வெள்ளநீர் தேங்கி நிற்கின்ற கிராமங்களை இனங்கண்டு பிரதேச சபை ஊழியர்களினால் நீர் வடிந்து ஓடக்கூடிய வகையில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பழுகாமம், கோவில் போரதீவு ஆகிய கிராமங்களில் பிரதேசசபை ஊழியர்களினால் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.