இந்திய நாடாளுமன்றத் தேர்தல் – 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பம்
In இந்தியா April 18, 2019 2:39 am GMT 0 Comments 1958 by : Dhackshala
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தமிழகத்தில் தேர்தல் ரத்துச்செய்யப்பட்ட வேலூர் தொகுதி தவிர்ந்த ஏனைய 38 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. அத்தோடு உ.பி.யில் 8 தொகுதிகளுக்கும் அசாம், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. மேலும் சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 3 தொகுதிகளுக்கும் காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கும் மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா 1தொகுதிக்கும் புதுச்சேரியில் 1 தொகுதிக்குமென மொத்தம் 95 தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
வாக்குப்பதிவுகள் அமைதியாக இடம்பெற அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 16ஆம் திகதி மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வாக்குபதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் இன்று நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பண பறிமுதல் விவகாரம் தொடர்பாக வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மாதம் 19ஆம் திகதி, தமிழகத்தில் ஏனைய பகுதிகளான அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடையவுள்ளது.
அதனைத்தொடர்ந்து மே மாதம் 23ஆம் திகதி வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.