20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – GMOA
In இலங்கை December 10, 2020 8:37 am GMT 0 Comments 1646 by : Dhackshala

பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெற்றோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வு குழு ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே வலியுறுத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “செவ்வாய்கிழமை உயிரிழந்த குழந்தைக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு தொற்று ஏற்படவில்லை. அவ்வாறெனில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும்.
தற்போது ஒரு குழந்தை மாத்திரமே உயிரிழந்துள்ள போதிலும் இதிலிருந்து நாம் அனைவரும் பாடமொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே துரிதமாக கொரோனா மரணங்கள் குறித்த மீளாய்வு குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தினோம். குறித்த மரணம் தொடர்பில் மீளாய்வு செய்வது அந்த குழுவின் பொறுப்பாகும்.
குழந்தை மிகவும் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என்று வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் முதியவர்களும் கொவிட் தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இளைஞர்களும் உயிரிழக்கின்றனர்.
எனவே இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை சுகாதார அமைச்சு நாட்டுக்கு தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்” வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.