5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்!
In இப்படியும் நடக்கிறது October 18, 2018 9:56 am GMT 0 Comments 1260 by : Litharsan

சிறுவன் ஒருவன் தனது தந்தையாரிடம் தொலைபேசியில் 5 நிமிடத்தில் வாருங்கள் என கூறியது 5 லட்சத்துடன் வாருங்கள் எனக்கேட்டதால் மகன் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடுசெய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேசம், நொய்டா நகரின் சிஜார்சி பகுதியில் இச்சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, 6 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவனை அவனது குடும்பத்தினர் அடிக்கடி திட்டி வந்துள்ளனர்.
அவனது தந்தை மளிகை கடை வைத்துள்ளார். அதனால் சிறுவனை கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு அவர் கூறுவார். அந்த சிறுவன் பணப்பெட்டியில் இருந்து பணம் எடுப்பது வழக்கம். இதேபோன்று சமீபத்தில் ரூ.100 பணம் எடுத்தது அறிந்து அவனது வீட்டில் திட்டியுள்ளனர்.
இந்நிலையில் அவன் பாடசாலைக்கு சென்றுள்ளான். அதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் தன்னையும் ஏற்றிச்செல்லுமாறு கேட்டுள்ளான்.
அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த அவன் பசித்ததில் வீட்டை தொடர்பு கொள்ள விரும்பியுள்ளான். இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள்காரரிடம் தொலைபேசியை கேட்டு வாங்கி வீட்டுக்கு தொடர்பு கொண்டுள்ளான்.
அவன் தனது தந்தையிடம், பிஸ்ராக் பகுதிக்கு வந்துள்ளேன். 5 நிமிடங்களில் இங்கு வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளான்.
ஆனால் சிறுவனின் தந்தைக்கு 5 லட்சம் பணத்துடன் வாருங்கள் என கேட்டுள்ளது. இதனால் தந்தை பொலிஸாரிடம் முறையிட, அவர்களும் தொலைபேசி எண்ணை கண்காணித்துள்ளனர். ஆனால் அது வேலைசெய்யாத நிலையில் கடத்தல் என சந்தேகம் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து பிஸ்ராக் பகுதிக்கு பொலிஸ் குழு ஒன்று சென்றது. சில மணிநேரத்திற்கு பின்னர் குறித்த தொலைபேசி வேலைசெய்தது. இதையடுத்து அவர்களைக் கண்டுபிடித்தனர்.
அதன்பின் விவரம் அறிந்து, தவறான புரிதலால் இந்த சம்பவம் நடந்து விட்டது என சிறுவனின் தந்தை கூறி விட்டு சிறுவனை அழைத்துச் சென்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.