Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியத்தேர்தலும் அதன் வெளியுறவுக் கொள்கையும்

In சிறப்புக் கட்டுரைகள்
Updated: 08:48 GMT, Mar 23, 2014 | Published: 08:28 GMT, Mar 23, 2014 |
0 Comments
1353
icon_com
This post was written by : adminsrilanka
nmodi_1

எழுதப்பட்ட மாற்றமுடியாத வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக கருத்துக்களை கூறி தமிழ்நாட்டு மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் அரசியல் மலடுகளாக்க முற்படுவது நேர்மையற்ற அரசியல். அன்று மீட்பர்களாக கருதப்பட்ட பி.வி.சிங்-வாஜ்பாய் ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் ஆட்சிபுரிந்தனர். ஜெனீவா பிரேரணை தொடர்பாக நரேந்திரமோடி இன்னமும் தனது சொந்தக் கருத்தைக்கூட வெளியிடவில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

-அ.நிக்ஸன்-

இந்திய தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றால் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதுதான் இன்று பலரின் கேள்வியாகவுள்ளது. சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் மாற்றமில்லை என்றும் ஆனால் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றால் இலங்கை தமிழர்களுக்கு ஏதேனும் விடிவு கிடைக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் இவ்வாறான நம்பிக்கைகள்- ஏமாற்றங்கள் வந்துபோவது இயல்பானதுதான்.

இந்திய வெளியுறவுக் கொள்கை

இந்தியாவை பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கை என்பது எழுதப்பட்ட மாற்றமடையாத ஒன்று. காலத்தின் தேவைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன் பிராந்திய நலன் கருதி சில விட்டுக்கொடுப்புகளுக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் இடமுண்டு. ஆனால் எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் இந்திய வெளியுறவுக்கொள்கை என்பதில் மாற்றம் செய்யமுடியாது. அது இந்திய கொள்கை வகுப்பாளர்கள்- இந்திய தேசிய நலன்கருதி தீர்மானம் எடுப்பவர்களின் கைகளில்தான் உள்ளது. ஆகவே எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை எடுத்தவுடன் செய்யமுடியாது என்பது கண்கூடு. இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட நெகிழாத யாப்பு. அதற்கேற்பவே இந்திய வெளியுறவுக் கொள்கையும் தீர்மானிக்கப்படுகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை கட்சி அரசியல் செயற்பாடுகளை மையப் புள்ளியாக வைத்துக்கொண்டு வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் பண்பு கிடையாது. கட்சிக் கொள்கைக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் பண்பு இலங்கை அரசாங்கத்திடம் மாத்திரமே உண்டு. ஏனெனில் அது சிறியநாடு என்பதுடன் பிராந்தியத்தில் அதன் முக்கியத்துவம் குறைவு என்பதால் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் சர்வதேசநாடுகள் பெரியளவு கவனம் செலுத்துவதிஇல்லை. ஆனால் போர் நடைபெற்ற காலத்தில் புலிகளை அழிப்பதற்கான அல்லது தமிழ் மக்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு ஏற்றமுறையில் அனைத்து நாடுகளுடனும் உறவை பேணுகின்ற ஒரு இராஜதந்திரமுறையை முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்த்தன உருவாக்கிக்கொடுத்தார்.

மஹிந்த சிந்தனை கொள்கையல்ல

அந்த கொள்கைகளைத்தான் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பின் பற்றுகின்றார். இந்தியாவை அணைத்துக்கொண்டு சீனாவிடம் முழுமையான உதவிபெறுகின்ற கொள்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்தாலும் ஜே.ஆர் ஜயவர்த்தன உருவாக்கிய அனைத்து நாடுகளையும் சமாளித்துச் செல்லுகின்ற கொள்கைதான் இலங்கை அரசாங்கத்துக்கு 2009இல் போரை அழிக்க உதவியது எனலாம். இந்த இடத்தில் புலிகளை அழிப்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையும் என்ற முடிவுக்கு வரலாம். இந்திய வெளியுறவுக் கொள்கையில் இலங்கை தொடர்பான பகுதி எவ்வாறு அமைந்துள்ளது என்று யாருக்கும் புரியாது. ஆனால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமையும் தமிழர்களுடைய அரசியல் கோரிக்கைகள் இந்திய மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களை ஒத்ததாக அல்லது அதனைவிடவும் குறைவாகவே அமையவேண்டும் என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையில் எழுதப்படாத ஒரு அம்சமாக உள்ளதாக கூறமுடியும்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுதான் இலங்கையின் கொள்கை என்றும் அவர் கூறியிருந்தார். இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் உள்ள சில அம்சங்களை மஹிந்த சிந்தனையில் இணைத்திருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச அன்று கூறியிருந்தார். இந்தியாவை பொறுத்தவரை தேர்தல் காலத்தில் வெளியிடப்படுகின்ற விஞ்ஞாபனங்கள்- ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுவது என்பது தொடர்பாக மாத்திரமே அமைந்திருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவைதான் அரசின் கொள்கையாகவும் மாறிவிடும். அதுவே வெளியுறவுக் கொள்கையாகவும் அவ்வப்போது பயன்படுத்தப்படும். ஆனால் இந்தியாவில் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்கள் என்ற இரண்டு சக்திகளின் முடிவுகள்தான் முக்கியமானதாக அமையும். கட்சி அரசியல் கொள்கைகளுக்குஅங்கு இடமில்லை.

எதிர்பார்த்த மாற்றம் வராது

ஆகவே இந்தியத் தேர்தல் முடிவுகளில் தமிழர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாது. அவ்வாறு இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையின் வெளியுறவுக் கொள்கை போன்று கட்சி அரசியலுக்கேற்ப மாறுவதாக அமைந்திருக்குமானால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு 1990 ஆம் ஆண்டு பி.வி.சிங் ஆட்சியமைத்தபோதும் அதன் பின்னர் வாஜ்பாய் ஆட்சியமைத்தபோதும் இலங்கைத் தமிழர்களுக்காக எதுவும் செய்யமுடியாமல் போனது ஏன்? ஜோர்ஜ் பெர்ணான்டோஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் புலிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை முன்வைத்திருந்தார். ஆனால் அவர் அங்கம் வகித்த அரசாங்கத்தினால்கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்ற ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை. புலிகள் மீதான தடையைக்கூட நீக்கமுடியவில்லை.

ஆக- கட்சி அரசியல் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து இந்தியாவெங்கும் பேசலாம் என்ற ஒரு சுதந்திரத்தைத் தவிர யார் ஆட்சியமைத்தாலும் இந்தியாவின் எழுதப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளை தாண்டி இலங்கைத் தமிழர் விடயத்தில் அரசியல் தீர்வை முன்வைக்கவோ அல்லது உதவிகூட செய்யவோ முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஆகவே பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கைகள் ஊட்டப்படுவது மற்றுமொரு ஏமாற்று முயற்சி. வேண்டுமானால் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு சிறியளவில் சில இடையூறுகள் வரலாம். ஆனாலும் இரு நாட்டு இராஜதந்திர உறவின் அடிப்படையில் அந்தத் தடைகள்கூட விலகுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் காணப்படுகின்றன.

தமிழக அரசியல் கட்சிகள்

தமிழக அரசியல் கட்சிகளை பொறுத்தவரை குறிப்பாக ஜெயலலிதா-கருணாநிதி தலைமையிலான அரசியல் கட்சிகள் இந்திய வெளியுறவுக் கொள்கை என்பதை தெரிந்தும் வாக்குகளை மாத்திரம் பெறும் நோக்கில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் புதுடில்லியில் உள்ள கட்சிகளுடன் கூட்டுச் சேரும்போது பொய்யான வாக்குறதிகளை வீசுகின்றனர். நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க தொடர்பாக தமிழ்நாட்டில் தற்போது பேசப்படுகின்ற நம்பிக்கையான விடயங்கள் எதுவும் சாத்தியப்படக்கூடியவை அல்ல. குறைந்தபட்சம் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக கொண்டுவருகின்ற திட்டத்தில்கூட பா.ஜ.கவிடம் உருப்படியான யோசனைகள் இல்லை. ஏனெனில் அதுகூட இந்திய தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய உற்பத்தித் திட்டம் என்ற கொள்கையில் உள்ளடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக வைகோ- பழநெடுமாறன்- சீமான் போன்றவர்கள் சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் என்பதற்காக பா.ஜ.க தொடர்பாக கூறுகின்ற கற்பனையான கதைகள் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலாகவே அமையும்.

தேர்தலுக்காக கூட்டுச் சேருவதென்பது வேறு. ஆனால் இந்திய அரசியல் யாப்பில் உள்ள மாற்றமுடியாத வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக கருத்துக்களை கூறி தமிழ்நாட்டு மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் அரசியல் மலடுகளாக்க முற்படுவது நேர்மையான அரசியல் அல்ல. கடந்தகால பட்டறிவுகள் இந்திய வெளியுறவுக் கொள்கை எது என்பதையும் மீட்பர்களாக கருதப்பட்ட பி.வி.சிங்- வாஜ்பாய் ஆகியோர் எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் ஆட்சி புரிந்தமையும் தெரிந்த வரலாறுகள்தான். இவை எல்லாமே இலங்கைத் தமிழர்களுக்கு ஞாபகத்தில் உள்ளன. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் அதனை மறந்துவிட்டார்கள் போலும். ஜெனீவா பிரேரணை தொடர்பாக நரேந்திரமோடி இன்னமும் தனது சொந்தக் கருத்தைக்கூட வெளியிடவில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. இதுதான் உண்மை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg