Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதோஷ விரதம்

In ஆன்மீகம்
Published: 18:02 GMT, Mar 25, 2014 |
0 Comments
1755
icon_com
This post was written by : Webmaster
Siva_Lingam_at_Jambukesvara_temple_in_Srirangam

Siva_Lingam_at_Jambukesvara_temple_in_Srirangam

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரியவிரதங்களில் பிரதானமானதாகும்.விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பின்னர் சிவபுராணம், சிவ நாமங்களை படித்து கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு நந்திக்கு காப்பரிசி படைத்து நெய்தீபம் ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.

நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத்  என்றால் துக்கம்  ரன்  என்றால் விரட்டுபவன், ருத்ரன் என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். எனவே பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்தியெம் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி காப்பரிசி வைத்து பூஜை செய்கிறார்கள்.

வழமையான நாட்களில் ஆலயத்தை மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக பிரதோஷ விரதநாளில் சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னுமாக வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்த பின்னர் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

பிரதோஷ வழிபாடு செய்ய திருமால் முதலான வானவர்களும் சிவாலயம் செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களில் வழிபாடு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 முதல் ஆறுமணி வரை பிரதோஷ நேரமாகும். இது தினப் பிரதோஷம் எனப்படும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். வறுமை ஒழியவும் நோய் தீரவும் கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg