Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நரேந்திர மோடியின் வருகை இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தருமா?

In இன்றைய பார்வை
Updated: 06:36 GMT, Mar 31, 2014 | Published: 06:24 GMT, Mar 31, 2014 |
0 Comments
1415
This post was written by : adminsrilanka

-யதீந்திரா-

இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு வலுவடைந்து வருகிறது. இந்தியாவெங்கும் மோடி அலையொன்று உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில்- இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெறக் கூடும் என்பதே அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது. இந்திய மாநிலங்களான பீகார்- ஒரிசா- பெங்கோல் ஆகியவற்றை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பி.ஜே.பி அமோக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாகவே இந்திய அரசியல் களநிலைமைகளை அவதானிப்போர் கருதுகின்றனர். கடந்த பத்து வருடங்களாக ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொடர்பில் மக்கள் சலிப்படைந்திருப்பதே இதற்கான காரணம் என்பதே பொதுவான அபிப்பிராயம்.

குஜராத்தின் சர்ச்சைக்குரிய முதலமைச்சரான நரேந்திர மோடி பரவலாக தீவிர இந்துத்துவ ஆதரவாளர் என்று கருதப்படுபவர். பி.ஜே.பியின் திட்டமிடல் வாதிகளில் ஒருவராக கருதப்படும் மோடி- 1985ஆம் ஆண்டு பி.ஜே.பியில் இணைந்துகொண்டார். மோடி- இந்துத் தேசியவாத அமைப்பென்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஆ.எஸ்.எஸ் (Rashtriya Swayamsevak Sangh – RSS) அமைப்பின் உறுப்பினராக இருந்தவர். அதனூடாகவே பாரதீய ஜனதா அரசியலுக்குள் பிரவேசித்தவர். இந்த பின்னணியிலேயே- மோடி பொதுவாக இந்துத்துவ ஆதரவாளராக நோக்கப்படுகின்றார். இதன் காரணமாகவே குஜராத்தில்- 2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரம் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கை ஒன்றையும் எடுக்க முற்படவில்லை என்றும்- அவர் மீது ஒரு விமர்சனம் உண்டு. 2002 கலவரத்தால் ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து மோடி பதவி விலகி- மீண்டும் தேர்தலை எதிர்கொண்டார். ஆனால் அந்த தேர்தலிலும் 182 ஆசனங்களில் 127 ஆசனங்களை வெற்றிபெற்று மீண்டும் பதவியிலமர்ந்தார். மோடி பரவலாக விமர்சிக்கப்பட்ட போதிலும்கூட குஜராத் விடயம்- அவரது அரசியல் வாழ்வை எந்தவகையிலும் பாதித்திருக்கவில்லை.

இத்தகையதொரு பின்புலத்தில் இறுதியாக 2009இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது மோடி பி.ஜே.பியின் முன்னணி பிரச்சார திட்டமிடலாளராக செயலாற்றியிருந்தார். இதன் போது ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றியீட்டியிருந்தது. இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில்- ஆளும் காங்கிரஸ் வெற்றியீட்டிய 2009 ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் ஒரு தீர்மானமான கட்டத்தை நெருங்கியிருந்தது. ஆனால் அப்போது தமிழ் நாட்டின் புலி ஆதரவாளர்களிடமிருந்து பிறிதொரு நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது. இத்தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. பி.ஜே.பி வெற்றியீட்டினால் நிலைமைகளில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படுமென்பதே அங்கிருந்து கொடுக்கப்பட்ட நம்பிக்கை.

இது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது மீண்டும் பி.ஜே.பி ஆட்சியமைக்கக்கூடிய சூழலில் வெளித்தெரிகின்ற பின்புலத்தில்- புதிய ஆட்சி இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் காணப்படுவதாகவே தெரிகிறது. புலம்பெயர் சூழலில் செயற்படும் சில குழுவினர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கென நிதி சேகரிப்பில்கூட ஈடுபடுவதாக தகவல்கள் கசிகின்றன. மோடி பிரதமராகக் கூடிய வாய்ப்பு அதிகம் தென்படுவதால் மோடிக்கு சார்பாக செயற்படுவதன் ஊடாக இந்தியாவின் தமிழர் தொடர்பான அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்பதே அவ்வாறானவர்களின் நம்பிக்கை போலும். அது உண்மைதானா? மோடி பிரதமரானால் இந்திய வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா?

மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருக்கும் சில விடயங்கள் மட்டுமே- அவரது வெளிவிவகார அணுகுமுறை எவ்வாறு அமையலாம் என்பதை ஊகிப்பதற்கு உதவுகின்றன. மோடியின் உரைகளிலிருந்து அவர் பொருளாதார விடயங்களுக்கே கூடுதல் முக்கியத்துவமளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும் அதனைத்தான் சொல்லி வருகிறது. தவிர காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அரசியல் அணுகுமுறைகளில் பெரிய வேறுபாடுகள் இருக்க முடியுமென்று எதிர்பார்ப்பது கடினமானதாகும். பனிப் போருக்கு பின்னரான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆட்சியாளர்களின் வெளிவிவகார அணுகுமுறைகளை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். இவ்விரு ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் அதிகமாக நெருங்கிச் செல்லும் கொள்கையைத்தான் கடைப்பிடித்திருக்கின்றனர். கிழக்கை உற்றுநோக்குங்கள் (Look East) எனும் கொள்கையே- மேற்படி பி.ஜே.பி மற்றும் காங்கிரஸின் கொள்கையாக இருந்திருக்கிறது. இந்த காலத்தில் இடம்பெற்ற பி.ஜே.பி தலைவர்களின் வெளிவிவகார உரைகளை எடுத்து நோக்கினாலும் யப்பான் மற்றும் தென்கிழக்கு நாடுகளுடனான ஒத்துழைப்புக்களை இந்தியா அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கையே தெரிகிறது. இவ்விரு கட்சிகளின் வெளிவிவகார அணுகுமுறைகளை ஆய்வுக்குட்படுத்தியிருப்போரின் கருத்தின் படி- கடந்த காலத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நன்கு ஆராய்ந்தால்- பி.ஜே.பியின் ஆட்சிக்காலத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் 1998இல் உத்தரவிட்ட இராணுவ நிலைப்பட்ட அணுப் பரிசோதனையை குறிப்பிடலாம் என்கின்றனர். ஆனால் அதற்கும்கூட காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கவில்லை. இந்த பின்னணியில் மோடியின் வருகை இந்திய வெளிவிவகார அணுகுமுறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தலாம்?

மோடி கடந்த வருடம் சென்னையில் ஆற்றிய உரையொன்றில் வெளிப்படுத்தியிருக்கும் சில கருத்துக்கள்- அவரது அணுகுமுறை எவ்வாறிருக்கலாம் என்பதை குறிப்புணர்த்துகின்றது. அத்துடன் பி.ஜே.பியின் கடந்தகால அணுகுமுறைகளில் உறுதியாக இருப்பாரென்றே தெரிகிறது. அதாவது வலிமைக்கும் சமாதானத்திற்கும் (strength and peace) இடையில் ஒரு சமநிலையை பேணிக்கொள்வது. சமஸ்கிருத அர்த்தத்தில் சக்தியும் சாந்தியும் என பொருள்படும். 1998இல் வாஜ்பாய் இராணுவ அணுவாயுத பரிசோதனையை (military nuclear test) மேற்கொண்ட போது பகிரங்கமாக ஒரு பிரகடணத்தையும் செய்திருந்தார். அதாவது அணுவாயுதங்களை முதலில் நாங்கள் பயன்படுத்த மாட்டோம்- மற்றையவர்கள் எங்கள் மீது அணுவாயுதங்களை ஏவ முற்படும்போது மட்டுமே நாமும் பயன்படுத்த வேண்டும். அதற்கு மாறாக எவரையும் தாக்கும் வகையில் நாம் அதனை பயன்படுத்தமாட்டோம். இந்த விடயங்களை தொகுத்து பார்க்கும்போது மோடியின் இந்தியா எவ்வாறு வெளிவிவகார விடயங்களை கையாள முற்படுமென்பதை ஊகிக்கலாம்.

மோடியின் சென்னை உரையில் இலங்கை விடயம் தொடர்பிலும் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் குடியுரிமையற்றவர்களாக வாழும் மக்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்- அதில் இலங்கை தமிழ் மக்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒரு விடயம். இந்த பின்னணியில் மோடி பிரதமரானால் ஒருவேளை அவர் தமிழ்நாட்டில் நீண்டகாலமாக முகாம் வாழ்க்கை வாழ்ந்துவரும் மக்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்குமாறு தனது நண்பரான ஜெயலலிதாவை அன்பாக கோரலாம். அது தவிர பெரியளவில் இலங்கை விவகாரத்தில் கொள்கைநிலைப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மோடி செயலாற்றப் போவதில்லை. அவரால் அது முடியாது. ஏனெனில் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதும் அரசியல்வாதிகள் அல்ல. அதற்கென பிறிதொரு பிரிவினர் உள்ளனர். இதற்கு சிறந்த உதாரணமாக தற்போது அமெரிக்க பிரேரணை தொடர்பில் இந்தியா எடுத்திருக்கும முடிவை குறிப்பிடலாம்.

ஏன் அரசியல் வாதிகளால் வெளிவிவகாரக் கொள்கையில் பெரியளவில் செல்வாக்குச் செலுத்த முடிவதில்லை? இதனை விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் முதலில் இந்திய வெளிவிவகார கொள்கை வகுப்பு முறைமையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg