Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏசாயா – கடவுளின் மீட்பு

In ஆன்மீகம்
Updated: 15:11 GMT, Jul 2, 2015 | Published: 15:10 GMT, Jul 2, 2015 |
0 Comments
1407
This post was written by : Varshini

கிறிஸ்தவத்தில் மிகவும் முக்கியமான ஒரு தீர்க்கதரிசி ஏசாயா. ஏசாயா என்றால் ‘கடவுளின் மீட்பு’ என்பது பொருள். ஏசாயாவின் வாழ்க்கைக் காலம் கிறிஸ்துவுக்கு முன்னால் சுமார் 700 ஆண்டுகள் என்பது வரலாற்றுக் கணக்கு.

ஓசியா மன்னனுடைய காலத்தில் இறைவாக்கு உரைக்க அழைக்கப்பட்டவர் ஏசாயா. அங்கிருந்து தொடர்ந்து பல மன்னர்களின் காலத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தீர்க்க தரிசனம் உரைத்தார். இஸ்ரவேல் மக்கள் கடவுளை விட்டு வழி விலகிச் சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் ஏசாயாவின் வார்த்தைகள் கடவுளின் கரிசனை யாகவும், எச்சரிக்கையாகவும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

கடவுள் இஸ்ரவேல் மக்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கிறார். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் கடவுளுடைய வார்த்தையை விட்டு விலகி நடக்கின்றனர். கடவுள் இஸ்ரவேல் மக்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். ஏராளமான அதிசயங்களை அவர்கள் கண்டனர். ஆனாலும் கடவுளை நாடுவதை விட்டு விட்டு அண்டை மன்னரோடு ஒப்பந்தங்களை இடுவதையே அவர்கள் நாடினார்கள். அவர்களிடம், மன்னனை நம்பாதீர்கள், ஆண்டவனை நம்புங்கள் என ஏசாயா வலியுறுத்துகிறார்.

இயேசுவின் முடிவைக் குறித்து அவர் இறை வாக்கு உரைத்தவை அப்படியே நிகழ்ந்தன. சொல்லப் போனால், இயேசுவைக் குறித்து இத்தனை தெளிவாக தீர்க்கதரிசனம் உரைத்தது ஏசாயா மட்டுமே. இயேசுவைப் பற்றிய அவரது வார்த்தைகள் இப்படி இருந்தன.

‘இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை: அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை’.

‘மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்’.

‘ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை’.

‘அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்’.

‘வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார்’.

இயேசுவின் பிறப்பைப் பற்றியும் அவர் இறை வாக்கு உரைத்திருந்தார்.

‘இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’ எனவும் ‘ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்’ எனவும் அவர் கூறியிருந்தார்.

மன்னர்களின் அரண்மனையில் எப்போது வேண்டுமானாலும் ஏறிச் செல்லுமளவுக்கு செல்வாக்கோடு இருந்தார் ஏசாயா. ஆனாலும் இறைவன் தனக்குச் சொன்ன வார்த்தைகளை மட்டுமே பேசினார் என்பது அவரை சிறந்த இறைவாக்கினராய் நிலைநிறுத்துகிறது. அரசியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மக்கள் வலுவற்ற நிலையில் இருந்த காலகட்டத்தில் தான் ஏசாயாவின் இறைவாக்குப் பணி நடந்தது.

ஏசாயாவின் நூல் விவிலிய நூல்களில் கவித்துவமும், ஆன்மிகச் செறிவும், பிரமிப்பூட்டும் தீர்க்கதரிசனங்களும் நிறைந்த ஒரு நூல். மக்களைப் பாவ வழியிலிருந்து மீட்டு உண்மையின் வழிக்குக் கொண்டு வர அவருடைய வார்த்தைகள், இறைவனின் நேரடிக் குரலாய் கம்பீரம் காட்டின.

ஏசாயாவின் மரணம் குறித்த செய்திகள் ஏதும் பைபிளில் இல்லை. ஆனால் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப் படி மனாசே மன்னனின் காலத்தில், மரத்தை அறுக்கும் வாளினால் இரண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதாகத் தெரிந்து கொள்கிறோம்.

‘காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரவேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை’ எனும் கடவுளின் குரல் ஏசாயாவின் மூலமாக இன்று நம்மை நோக்கியும் நீட்டப்படுகிறது என்பதை உணர்வோம்.

தினம் வருந்துவோம், மனம் திருந்துவோம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg