Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறைவன் விரும்புவது தூய்மையான இதயத்தையே!

In ஆன்மீகம்
Updated: 06:07 GMT, Jul 5, 2015 | Published: 06:07 GMT, Jul 5, 2015 |
0 Comments
1354
This post was written by :

”நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே. கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்துகொண்டு அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் ரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.”

ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம், உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர்; நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.”- (1 யோவான் 1:5-10) பாவம் செய்துவிட்டேன். இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்று முறையிட்டு அவரது திருநாமத்தைச் சொல்வதால் உடல், மனம் எல்லாம் தூய்மை அடையும். இறைத் திருநாமத்தைச் சொல்வதன் மூலம் நாக்கைத் தூய்மை செய்துகொள்வோம்.

சுற்றியுள்ளோரின் குற்றங்களை உற்று நோக்காது, சற்று அவர்களையும் புகழ்ந்து போற்றுவோம். தளர்ச்சியுற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருப்போம். தேவையை உணர்ந்து பிறருக்கு சேவை செய்வோம். சோதனைகள் சூழ்ந்து, நம்மை நிலை குலையச் செய்யும்போது வேதனைகளை வெளிக்காட்டாது துணிவு காட்டுவோம். வாழ வேண்டிய வகையில் வாழ விருப்புடன் இன்னும் கடினமாக உழைப்போம். ஆற்றல் அற்றவர்களிடம் சாந்தம் காட்டுவோம். நிறையுடையவரைப் பற்றிப் பொறாமையை அகற்றி, குறையுடையவரைப் பற்றி அதிகம் சிந்திப்போம். மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தும் இனியவராக இனிமை மிக்கவராய் இருப்போம்.

நம் வாழ்வின் குறுகிய காலம், இறுதி நிலையை அடைய விரைகின்றது. அந்தி வேளை வந்தடைகிறது. இருள் சூழ்ந்து வருகிறது. மெல்ல மெல்ல ஆழ்ந்த இரவு படர்கின்றது. உலக இன்பங்கள் மின்னலைப்போல் மறைந்து போகின்றன. பெருமைகள் மங்கிப் போகின்றன. கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் மாற்றத்தையும் அழிவையுமே குறிக்கின்றன. நமது உடைமைகளை விட நம் தூய்மையான இதயத்தையே இறைவன் விரும்புகிறார் என்ற உண்மை மட்டும் மின்னலாய் அவ்வப்போது ஒளிர்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg