Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்ன கிருஷ்ணனின் கதைகள் இரண்டு

In ஆன்மீகம்
Updated: 06:03 GMT, Nov 11, 2015 | Published: 06:00 GMT, Nov 11, 2015 |
0 Comments
1452
This post was written by :

கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணனைக் கொல்வதற்கு கம்சனால் அனுப்பப்பட்டாள் ‘பூதகி’ என்னும் அரக்கி. இவள் அழகி வடிவம் எடுத்து கோகுலம் வந்தாள். அங்கு பணிப் பெண்ணாகச் சேர்ந்தாள். குழந்தை கிருஷ்ணனை கவனிக்கும் பணி அவளுக்குத் தரப்பட்டது. ஒருநாள் குழந்தை கிருஷ்ணன் அழுததும், தொட்டிலிலிருந்து தூக்கி மடியில் வைத்துக் கொண்டு யாரும் அறியாவண்ணம், தன் மார்பிலிருந்து விஷம் கலந்த பாலை ஊட்டினாள். குழந்தை கிருஷ்ணன் தன் பிஞ்சுப் பாதங்களால் அவளை உதைத்தபடி பாலை உறிஞ்சியதும் அவள் பிணமாகி வீழ்ந்தாள். அவளது சுயஉருவம் கண்டு அனைவரும் அஞ்சினர். அந்த அரக்கியின் உடலை தகனம் செய்தார்கள்.

அப்போது அவளது உடலிலிருந்து வெளியான புகை துர்நாற்றம் வீசாமல், சந்தனக் கட்டையை எரித்தால் ஏற்படும் சுகந்தமான நறுமணம் வீசியது! காரணம், குழந்தை கிருஷ்ணனின் பாதம் அவள்மேல் பட்டதுதான்! இதே போல் இன்னொரு நிகழ்வையும் புராணம் விவரிக்கிறது.

மதுராவில் ‘திரிவக்ரா’ என்று கம்சனுக்கு ஒரு பணிப்பெண் இருந்தாள். கூன் முதுகு கொண்ட அவள், கம்சனுக்கு தினமும் சந்தனம் அரைத்துக் கொடுப்பாள். ஒரு நாள், அவள் அவ்வாறு அரைத்த சந்தனத்தை எடுத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் செல்கையில் வழியில் கிருஷ்ணனையும் பலராமனையும் சந்தித்தாள். அப்போது அவர்களுக்கு அன்புடன் சிறிதளவு சந்தனம் கொடுத்தாள்.

அவளுக்கு அப்போதே அருள்புரிய எண்ணினார் கிருஷ்ணர். தன் இரண்டு பாதங்களால் அவளுடைய முன் கால்களை மிதித்துக் கொண்டு, இரண்டு விரல்களால் அவள் முகத்தைப் பிடித்து அவள் உடலை அப்படியே நிமிர்த்தினார். அவளுடைய கூன் முதுகு உடனே சீராயிற்று. அதனாலேயே அவள் அழகிய பெண்ணாகவும் காட்சி தந்தாள்.

தன் குறை நீக்கி புதுப்பொலிவு தந்த கிருஷ்ணனையும் பலராமனையும் தன் வீட்டிற்கு எழுந்தருளுமாறு வேண்டினாள். ‘கம்ச வதம் முடிந்த பிறகு வருகிறோம்’ என்று வாக்கு அளித்து அப்படியே அந்த வாக்கை நிறைவேற்றினார்கள். திரிவக்ரா என்ற அந்தப் பெண் வாழ்ந்த வீடு தற்போது ‘குப்ஜ்கூப்’ என அழைக்கப்படுகிறது. அதை இன்றும் மதுராவில் காணலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg