Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறிஸ்மஸ் பண்டிகை: விண்ணக வேந்தன் பாலகனாய் அவதரித்தார்

In இன்றைய பார்வை
Updated: 04:37 GMT, Dec 25, 2015 | Published: 04:37 GMT, Dec 25, 2015 |
0 Comments
1574
This post was written by :

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்து பிறப்பின் மகிமையை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.

உலக மக்களின் மீட்பிற்காக மனிதனாக உருவெடுத்து, ஏழ்மையின் வடிவமாய் மாட்டுத் தொட்டிலில் பாலகன் இயேசு, மார்கழி மாதம் 25 ஆம் நாள் கொட்டும் பனியில் விண்ணகம் மற்றும் மண்ணகம் என்பன ஆர்ப்பரிக்க அவதரித்தார்.

புனித கன்னி மரியாளுக்கும் புனித சூசையப்பருக்கும் மகனாக பிறந்த இயேசுவின் பிறப்புச் செய்தியானது இடையர்களும், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

பாவ வாழ்வில் உழன்று கொண்டிருந்த மனித சமூகத்திற்கு இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு மகிழ்ச்சியையும் மீட்பினையும் வழங்கியது.

கிறிஸ்மஸ் பண்டிகையானது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகச்சிறப்பானது. இப்பண்டிக்கைக்காக எவ்வளவோ ஆயத்தங்களை நாம் செய்து கொள்கிறோம். இப்பண்டிகை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சிறுவரைக் கேட்டால் புத்தாடை உடுத்தும் பண்டிகை, அறுசுவை உணவு உண்ணும் பண்டிகை, வான வேடிக்கைகள் விடும் பண்டிகை என்றும் பலவற்றினை தெரிவிப்பர்.

இவ்வாறானதொரு நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தொடர்பில் நோக்குவது இந்த நேரத்தில் சாலச்சிறந்து.

மீட்பராம் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனித அவதாரம் எடுப்பதற்கு அவரைத்தூண்டியது எது என்று கேட்டால், மானிடர்களாகிய நம்மீது அவர் கொண்ட அன்பு எனலாம்.

மானிடன் பாவ வாழ்வில் சுழன்ற போது இறைவன் அவனைத் தண்டித்தாலும் அவனிடம் அவர் கொண்ட அன்பின் காரணமாக அவனை மீட்பதற்காக ஓர் மீட்பரை வாக்களித்தார்.

இதற்கான காலம் கனிந்த போது அந்த மீட்பர் இயேசு கிறிஸ்துவாக இந்த உலகில் அவதரித்தார். இறைவன் மாத்திரமல்ல இறைமகன் இயேசுவும் நம்மில் அன்பு கூர்ந்தார்.

இயேசு எம்மீது வைத்த அன்பானது நிலையானதாகும். இதன் காரணமாகத்தான் கிறிஸ்மஸ் பண்டிகையில் இறை அன்பின் வெளிப்பாட்டை நாம் காண்கிறோம்.

உலகில் மனிதன் தாழ்மையை விரும்புவதில்லை. ஆனால் இறைமகன் இயேசு தாழ்மையை விரும்புகிறார். நாம் எவ்வளவு தாழ்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை கிறிஸ்து தனது பிறப்பின் மூலம் காண்பித்தார் எனலாம்.

இறைவனான அவர் அந்நிலையிலிருந்து தன்னைத் தாழ்த்தி ஏழை குழந்தையாக பிறந்தார். அவர் அரசனையோ, பிரபுக்களையோ பெற்றோராய்க் கொள்ளாமல் மிகவும் ஏழைகளான சூசையப்பர் மற்றும் மரியாள் ஆகியோரையே பெற்றோராக தெரிவு செய்தார்.

அவர் பிறந்த பொழுது சத்திரத்திலும் இடம் இல்லாமல் மாட்டுக் கொட்டிலில் ஏழையிலும் பரம ஏழையாய் பிறந்தார். இதன் மூலம் நாம் அவரது தாழ்மையை காண்கிறோம்.

இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, அனைத்துமே தூய்மையானது அவர் தூய்மையான முறையில் கன்னிகையான புனித மரியாள் மூலம் பிறந்தார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும்நம்மில் தூய்மை உண்டா? என்தனை நாம் இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயமாகவுள்ளது.

கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெறும் போதைப்பாவனை, அடிபிடிகள், சண்டை சச்ரவுகளுக்கு அளவில்லை. ஆனால் முதல் கிறிஸ்மஸ் இரவு அமைதியான தூய இரவாக இருந்தது. உலகின் பல்வேறு சந்தடிகளின் மத்தியில் பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் அமைதியும், தூய்மையும் நிலவியது எனவே இப்பண்டிகையை தூய்மையாக கொண்டாடுவோம்.

இந்த கிறிஸ்மஸ் பண்டிகையினை சிலர் ஈகையின் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பொதுவாக நாம் கொடுப்பதை விட பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஆனால் கிறிஸ்மஸ் நம்மை கொடுக்கும் படி ஏவுகிறது.

மேன்மைகளையும் துறந்து ஓர் அடிமையாகத் தம்மை உலகிற்கு ஈந்தார். இந்த மேலான அன்பின் ஈவை பெற்றுக் கொண்ட நாம் அதே அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இங்கு தான் கிறிஸ்தவ ஈகை ஆரம்பமாகிறது.

நமது பொருளை, நேரத்தை பிறருக்கு ஈகையாக கொடுக்க வேண்டும். அன்று மூவிராசாங்கள் இயேசுவை கண்டு பணிந்துபொன்னையும், தூப வர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாக படைத்தனர். இந்த நிலையில் இன்று நாம் நம்மையே அவருக்கு காணிக்கையாக படைக்க வேண்டும்.

பண்டிகை காலத்தில் நண்பர்களுக்கு பரிசு பொருட்கள், தின்பண்டங்கள் கொடுக்கிறோம். ஏழைகளுக்கு உதவி செய்கிறோம். இவைகளுக்கு மூல காரணம் கிறிஸ்து தம்மை நமக்கு தந்தார் என்பதே ஆகும்.

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் நாம் அன்பு, தாழ்மை, தூய்மை,ஈகை ஆகிய பண்புகளுடன் கொண்டாடுவோம். அப்பொழுதுதான் இந்த பண்டிகையானது எல்லா மக்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் ஓர் பண்டிகையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

‘மானிடப் பிறவிகளின் பாவங்களை போக்க விண்ணக வேந்தன் பாலகனாய் அவதரித்தார்’ அல்லேலுயா.

– பெனி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg