நியூஸிலாந்து நிலநடுக்கம்: மீட்புப் பணிகளில் தீவிரம்
நியூஸிலாந்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு தாக்கிய நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வனர்தத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பலரும் வீதிகள் முடக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளாக சென்றிருந்த நூற்றுக்கணக்கான சீனர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் மீட்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம், மீட்கப்பட்ட சீன சுற்றுலாப்பயணிகள் தமது அனுபவங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில் சீன சுற்றுலாப்பயணி ஒருவர் கருத்துரைக்கையில், நாங்கள் சுனாமித் தாக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்தோம். அதனால் மேட்டு நிலம் நோக்கி நடந்தோம். ஆனாலும், மண்சரிவு அபாயம் இருந்ததன் காரணமாக மலைகளில் ஏறுவதற்கும் பயமாக இருந்தது என்று தெரிவித்தார்.
மற்றொருவர் கருத்துரைக்கையில், நிலநடுக்கம் ஏற்பட்டதும் நான் தரையில் வீழ்ந்து படுத்துவிட்டேன். ஏனக்கு ரிக்டர் அளவு என்ன என்று தெரியாது. ஆனால் தரையில் நான் இரண்டு மீற்றர் தூரத்திற்கு அசைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் நலநடுக்கத்தைத் தொடர்ந்து தூதரகத்திற்கு மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து அறிவித்திருந்தமதாகவும் அதன் பின்னர் அவர்கள் தம்மை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிருந்ததாகவும் பாதுகாப்பாக மீட்க்பபட்ட சுற்றுலாப்பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதேபோன்று பல்வேறு பனுதிகளிலும் சிக்கியுள்ள மக்களை மீட்கும், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு நகர்த்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நிலநடுக்கத்தினால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் மற்றும் வீதிகளில் ஏற்பட்டுள்ள பிழவுகள், சேதங்கள் என அனைத்தையும் தெளிவாகக் காட்டும் காணொளிக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் சேதங்கள் பற்றிய தெளிவான வெளிப்படுத்தல்கள் காணப்படுகின்றன.