Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மோர்சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்துச் செய்தது நீதிமன்றம்

In
Published: 04:19 GMT, Nov 23, 2016 |
0 Comments
1274
This post was written by : Sambavi

எகிப்து முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளில் ஒன்றை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  அண்மையில் மோர்ச்சிக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒன்று ரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு வழக்குகளில் ஒன்றிற்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாக விளங்கும் முகமது மோர்சி முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு ஜனாதிபதியானார்.
இருப்பினும் மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் இராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி, மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவரது முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் தடை செய்யப்பட்டு, முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மோர்சி மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்தது. சில வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டு ஆயுள் தண்டனை தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மோர்சி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ஒரு ஆயுள் தண்டனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், ஈரான் மற்றும் பாலஸ்தீன தீவிரவாத குழுவுக்கு உளவு பார்த்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு சகோதரத்துவ கட்சி நிர்வாகிகளின் தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கை மறுவிசாரணை செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றொரு ஆயுள் தண்டனையை எதிர்த்து மோர்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணை இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.