Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவியுங்கள்: டொனால்ட் ட்ரம்பிடம் மைத்திரி கோரிக்கை!

In இலங்கை
Updated: 11:05 GMT, Nov 27, 2016 | Published: 11:05 GMT, Nov 27, 2016 |
0 Comments
1395
This post was written by : Varshini

யுத்தக் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான அழுத்தத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு கொடுக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பிவைத்துள்ள விசேட செய்தியிலேயே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்-

”ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்களிலிருந்து நாட்டை முற்றாக விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு வழியேற்படுத்தித் தருமாறு அமெரிக்காவிற்கு விசேட செய்தியொன்றை அனுப்பியுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டை வலுவிழக்க செய்து, அமெரிக்காவும், இலங்கையும் இணைந்து கடந்த வருடம் முன்வைத்திருந்த யோசனையை டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பவுள்ளேன்.

அத்துடன், விசேட தூதுக்குழுவொன்றையும் அனுப்பி, இது தொடர்பில் கலந்துரையாடி எமது நாட்டை யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து முற்றாக விடுவிக்கவுள்ளேன்” என்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் அரங்கேற்றப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ள நிலையில், இலங்கையில் காணப்படும் அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு ஓய்வுபெறவுள்ள ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, ஜனாதிபதி மைத்திரி கோரிக்கை விடுத்திருந்தார்.

யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கையில் விசேட நீதிமன்றம் அமைப்பதாக ஐ.நா.வுக்கு வழங்கியுள்ள வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அரசாங்கத்தின் தொடர் செயற்பாடுகள் அதனை மேலும் வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமை, இலங்கை தமிழர்களுக்கு பாதகமான நிலையை தோற்றுவிக்குமென ஏற்கனவே தமிழ்த் தரப்பினர் சந்தேகம் கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி இவ்வாறான ஒரு செய்தியை ட்ரம்பிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg