Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 85 சதவீத வரி: புதிய மசோதா தாக்கல்

In இந்தியா
Updated: 04:31 GMT, Nov 29, 2016 | Published: 04:31 GMT, Nov 29, 2016 |
0 Comments
1320
This post was written by : Sambavi

கணக்கில் வராத பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் 50 சதவீத வரியும், அதை மறைத்து கண்டுபிடிக்கப்பட்டால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என்ற புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் பணத் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் இரண்டரை இலட்சத்திற்கு மேல் வைப்புச் செய்பவர்களிடம் கணக்கு விபரங்கள் கேட்கப்படுகின்றன.

இந்த நிலையில், கணக்குகள் முறையாக காண்பிக்கப்படாவிட்டால் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருமான வரி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட திருத்த மசோதவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்தார்.

இதில் கணக்கில் வராத பணத்தை வங்கியில் வைப்புச் செய்தவர்களுக்கு 30 சதவீத வரியும், அபராதமாக 10 சதவீதமும், வரிக்கு கூடுதல் வரியாக 33 சதவீதம் அதாவது 10 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் கூடுதல் வரியாக பிடிக்கப்படும் தொகை, ‘கரிப் கல்யாண்’ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதிக்காக ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை மீறி, கருப்பு பணத்தை மறைத்து வருமான வரி சோதனையில் சிக்கினால் 85 சதவீத வரி விதிக்கப்படும் என சட்ட திருத்தத்தில் முக்கிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருமான வரி சோதனை சிக்கினால், அந்த தொகைக்கு 60 சதவீத வரியும், கூடுதல் கட்டணமாக வரியில் 25 சதவீதம், அதாவது 15 சதவீதம் வரியும் விதிக்கப்படும்.

இதுதவிர, கணக்கில் கட்டாத பணத்தில் 25 சதவீதத்தை வறுமை ஒழிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு எந்த வட்டியும் வழங்கப்பட மாட்டாது. மேலும், 4 ஆண்டுகளுக்கு டெபாசிட் பணத்தை எடுக்கவும் முடியாது. இந்த பணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த மசோதாவுக்கு கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறான போதும், இதுவரை நாட்களும் கருப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதை பயன்படுத்தி, கருப்பு பணத்தை தெரிவித்தவர்களுக்கு 45 சதவீத வரி விதிக்கப்பட்டது. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தாமல் விட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தற்போதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg