Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கறுப்புப் பணம் பதுக்குவோருக்கு மோடி அச்சத்தை ஏற்படுத்துவார்: ஹஸ்முக் அதியா

In இந்தியா
Updated: 05:48 GMT, Nov 29, 2016 | Published: 05:47 GMT, Nov 29, 2016 |
0 Comments
1204
This post was written by : Sambavi

‘கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்போர், தங்களது ஒட்டுமொத்த வருவாயை அறிவித்து, அதற்கு 50 சதவீத வரியைச் செலுத்திவிட்டால், நவம்பர் 10ஆம் திகதிக்குப் பிறகு வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கு வருமான வரித் துறை ஆதாரம் கேட்காது’ என்று வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா கூறியுள்ளார்.

மேலும், கறுப்புப் பணம் பதுக்குவோர் மனதில் அச்சத்தை உருவாக்கும் வகையில், கருப்புப் பணத்துக்கு எதிராக, டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு பிரதமர் மோடி மேலும் பல நடவடிக்கைகளை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, கடந்த 8ஆம் திகதி அறிவித்தார். அதன் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட கருப்புப் பணத்துக்கு 50 சதவீத வரியும் மறைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் 85 சதவீத வரியும் அறவிடப்படும் என்ற புதிய மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் குறித்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா, செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். இதன் போது,

‘கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்து அறிவித்து, அவற்றுக்கு 50 சதவீத வரியைச் செலுத்துவோரிடம் அந்த வருவாய்க்கு ஆதாரம் கேட்கப்படமாட்டாது.

ஆனால், வருமான வரிச் சோதனையின்போது பிடிபட்டால், அந்த தொகைக்கு 85 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிப்பவர்கள், சொத்து வரி உள்ளிட்ட வரிச் சட்டங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவர். ஆனால், அன்னியச் செலாவணிச் சட்டம், பண மோசடி தடுப்புச் சட்டம், கருப்புப் பணச் சட்டம் ஆகியவற்றில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.

இதனிடையே, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், புதிய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி அவற்றை மீண்டும் பதுக்க முயலுகிறார்கள். இதனைத் தடுப்பதற்காக, வருவமான வரிச் சட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் திருத்தப்பட்டுள்ளன. கறுப்புப் பணம் பதுக்குவோர் மனதில் அச்சத்தை உருவாக்கும் வகையில், கருப்புப் பணத்துக்கு எதிராக, டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு பிரதமர் மோடி மேலும் பல நடவடிக்கைகளை எடுப்பார்’ என்றார் ஹஸ்முக் அதியா.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg