Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச மனித உரிமைகள் தினம்: பங்களாதேஷ், பிலிப்பைன்ஸில் பேரணிகள்

In
Updated: 16:50 GMT, Dec 10, 2016 | Published: 10:40 GMT, Dec 10, 2016 |
0 Comments
1252
This post was written by : hoshika

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (சனிக் கிழமை) கடைப்பிடிக்கப்படும் நிலையில், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியின் போது, மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ரோஹின்யா மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கேட்டுக் கொண்டனர்.

இதேவேளை மியன்மாரின் தேசிய ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றருமான ஆங் சான் சூகி மற்றும் அவரது அரசாங்கம் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தியனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷின் மனித உரிமைகள் பணியகத்தின் பொதுச் செயலாளர் மொஹம்மட் ஷாஜஹான், “ மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளில், ஒவ்வொருவரினதும் உரிமைக்காக நாம் குரலெழுப்புவோம். ஆனால் துரதிஷ்டவசமாக மியன்மாரில் கொடூரமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்ற ரோஹின்யா மக்கள் பற்றி அதிகமாக கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கான போராட, குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

நான் மிகத் தாழ்மையுடன் ஐக்கிய நாடுகள சபை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கள் மற்றும் அனைத்து சர்வதேச அமைப்புக்களிடம் தாழ்மையுடன் ஒரு விடயத்தை கேட்டுக் கொள்கின்றேன். தற்போதைய ஐ.நா பொதுச் செயலாளர், அவருக்கு பின்னர் பொறுப்பேற்க இருக்கும் பொதுச் செயலாளர், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் என அனைவரும் மியன்மாருக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலை தொடர்பில் ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து மியன்மாரின் ரோஹின் மாநிலத்தில் தொடரும் வன்முறைகளினால், இதுவரை நூற்றக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பங்களாதேஷில் இராணுவ படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குறைந்தது 86 பேர் உயிரிழந்ததுடன், 22 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி ரொட்ரிகோவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் மணிலாவில் மனித உரிமை ஆர்வலர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பலர் கலந்துகொண்டதுடன், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பலர் கொன்று குவிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

கடந்த ஜீலை மாதம் முதலாம் திகதி ரொட்ரிகோ ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் இடம்பெற்று வரும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளால் 2,004 பேர் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 3,060 பேர் கொல்லப்பட்டதுடன், அவை விசாரணையின் போதே உயிரிழந்தமை என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg