Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பீதியில் மஹிந்தர் வதந்திகளை பரப்புகிறார்: ராஜித

In
Published: 05:16 GMT, Jan 5, 2017 |
0 Comments
1127

நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்கள் பயன்மிக்கவையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிந்தாலும், நல்லாட்சி அரசு தொடர்ந்தும் நீடிக்குமானால் சிறைக்குச் சென்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறுகையில்-

”அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கரில் சுதந்திர வர்த்தக வலயத்தை ஸ்தாபிக்க மஹிந்த காலத்திலேயே திட்டமிடப்பட்டது. இத் திட்டத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொழில்வாய்பு கிடைக்கும் என்ற காரணத்தால் நாம் எதிர்க்கவில்லை. எனினும், குறித்த திட்டம் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மஹிந்த ஏற்றுக்கொள்ளவில்லை.

அம்பாந்தோட்டைத் துறைமுகமானது சர்வதேச கடல் எல்லைக்கு மிக அருகில் காணப்படுகின்றமையால் அத் துறைமுகத்தில் எண்ணெய்க் குதங்களை அமைக்குமாறு நாம் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். இதன் மூலம் நாளொன்றுக்கு குறைந்தது 70 கப்பல்கள் எமது துறைமுகத்துக்கு வந்து எண்ணெய் நிரப்பினால்கூட அதிக இலாபத்தை எம்மால் ஈட்டமுடியும். அதேபோல், மத்தளை விமான நிலையம் குறித்தும் நாம் பல்வேறு யோசனைகளை முன்வைத்தோம். இவற்றையும் மஹிந்த கேட்டுக்கொள்ளவில்லை.

தற்போது பயனற்றுக் கிடக்கும் இந்த இரண்டு நிறுவனங்களின் நிலைமையையும் மாற்றியமைக்க வேண்டும் என்றே நாம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன் பிரகாரம் இங்கு ஏற்படுத்தப்படும் சுதந்திர வர்த்தக வலயத்தின் மூலம் எமது நாட்டவரே அதிக நன்மையை அடைவர். தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். நாம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு காணிகளை வழங்குகின்றோமே தவிர விற்கவில்லை. எந்நேரத்திலும், குறித்த காணியை மீளப்பெறும் வகையிலேயே ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் பயனை மஹிந்த ராஜபக்ஷவும் நன்கு அறிவார். எனினும், எமது அரசு தொடர்ந்தும் நீடிக்குமானால் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் மோசடிக் குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பீதியினாலேயே, அரசைக் கவிழ்ப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்பி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்” என்றார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)