Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதிப்போக்குவரத்து குறித்து கிழக்கு முதல்வர் மீது குற்றச்சாட்டு

In
Published: 04:45 GMT, Feb 12, 2017 |
0 Comments
1314
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாகவும் அதனால், அந்தப் பிராந்தியத்திலுள்ள தனியார் பேரூந்து உரிமையாளர்களின் தொழில் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்கு கரையோர தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கிழக்கு முதல்வரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்ட போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லையென அச் சங்கம் தெரிவிக்கின்றது.

தென்கிழக்கு கரையோர தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று (சனிக்கிழமை) அக்கரைப்பற்றில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பேரூந்துகள் பயணிகள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் சில பேரூந்துகளுக்கு பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் வழங்கியுள்ளதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் எம்.எஸ்.பைறூஸ் இதன்போது தெரிவித்தார். இதனால் ஏற்கனவே சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்துகளின் உரிமையாளர்கள் தமது தொழிலில் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையானது, கிழக்கு மாகாண முதலமைச்சருடைய அமைச்சின் கீழுள்ள ஒரு அதிகாரசபையாகும். இதற்கான தலைவரை முதலமைச்சரே நியமித்துள்ளார். அந்த வகையில், முதலமைச்சரிடம் இது விடயம் தொடர்பில் நேரடியாக சென்று முறைப்பாட்டினை தெரிவித்தும், முதலமைச்சர் இது விடயத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தங்களுக்கு சந்தேகத்தினை தோற்றுவிப்பதாகவும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதாக கூறிவருகின்ற முதலமைச்சர், கிழக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களின் தொழில் விடயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வதாகவும் அச்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இது விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் இவ்விடயத்தில் அவசரமாக தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இல்லையேல் எதிர்வரும் காலங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தும் நிலை ஏற்படுமென அச்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

Buss issue - 011

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg