Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு யாருக்கு? – திட்டவட்டமாக தெரிவித்தார் அன்பழகன்

In
Updated: 16:30 GMT, Feb 16, 2017 | Published: 04:39 GMT, Feb 16, 2017 |
0 Comments
1359
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
anpalakan123

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள எட்டாபடி பழனிசாமி சட்ட மன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில், குறித்த நம்பிக்கை  வாக்கெடுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும் ஆதரவளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சர் உறுதி

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தொடர்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மெரீனாவில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி

மெரீனா ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி மரியாதை

முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் மாளிகையிலிருந்து மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்து அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தினருகே பதற்றம்

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தினருகே அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்தே அங்கு இவ்வாறு பரபரப்பான சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சரானார் பழனிச்சாமி

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவினால் முதலமைச்சருக்கு பதவி பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் காரிலிருந்து அரச இலச்சினை நீக்கம்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி சற்று நேரத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் காரிலிருந்து சுழல் விளக்கு மற்றும் அரச இலச்சினை என்பன அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலிருந்து பொலிஸ் பாதுகாப்பும் திரும்பப் பெற்றப்பட்டுள்ளது.

பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்பு

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட புதிய அமைச்சர்களாக தெரிவாகியுள்ள அனைவரும் ஆளுநர் மாளிகையை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், சில நிமிடங்களில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

கூவத்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது ஆளுநர் மாளிகையை வந்தடைந்துள்ளனர்.

பதவியேற்க அமைச்சர்கள் புறப்பட்டனர்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மாலை 4.30 மணியளவில் பதவியேற்கவுள்ள நிலையில், போயஸ் கார்டனிலிருந்து அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.

சற்று நேரத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறார் பழனிச்சாமி

இன்னும் சில மணித்துளிகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

அதன்படி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் தற்போது போயஸ் கார்டனை நோக்கி வந்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பள்ளித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை தவிர ஏனைய அனைவரும் கடந்த அமைச்சரவையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியராஜனுக்கு பதிலாக செங்கோட்டையன் பள்ளித்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் பழனிச்சாமி

தமிழக முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தற்போது மீண்டும் சந்தித்து புதிய அமைச்சரவை பட்டியலை கையளித்துள்ளார்.

ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்களில் எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவிக்கப்படுவதோடு, புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழனிச்சாமி பதவியேற்பிற்கு எதிர்ப்பு

தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பழனிச்சாமியின் பதவி பிரமாணத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு பதிவு செய்துள்ளார்.

அதன்படி குறித்த வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்றத்தில் 2.15 மணிக்கு விசாரிக்கப்படவுள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஓ.பி.எஸ். தரப்பு சந்திப்பு

தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்கவுள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தெரிவுசெய்யப்பட்டமை சட்டப்படி செல்லாது என்பதை நேரில் வலியுறுத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை 20ஆம் திகதி கூடுகிறது

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் 20ஆம் திகதி சட்டசபை கூடுகிறது.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு

அ.தி.மு.க. சட்டசபை குழுவின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கடந்த ஒன்பது நாட்களாக கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 2 மணிக்கு கூவத்தூரிலிருந்து சென்னை செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்பு

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரானார் பழனிச்சாமி

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையிலிருந்து உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பதினைந்து நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் அழைப்பை ஏற்று அ.தி.மு.க. வின் சட்டமன்றத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஆளுநர் மாளிகையில், ஆளுநருடன் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பழனிச்சாமியுடன், டிடிவி.தினகரன், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் உடன் சென்றுள்ளனர்.

ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! – ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திப்பதற்காக அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாட்டி பழனிச்சாமி கூவத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்றுள்ளார்.

சந்திப்புக்கான அழைப்பை ஆளுநரே விடுத்துள்ள நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்?

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் குறித்த சர்ச்சை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வருகின்ற நிலையில், அதற்கான அறிவிப்பை இன்றைய தினம் ஆளுநர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg