Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரன் பெற்றுத்தராத ஈழத்தை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது! – கிருஷ்ணபிள்ளை

In இலங்கை
Published: 10:52 GMT, Feb 19, 2017 |
0 Comments
1377
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத ஈழத்தை வேறு யாரும் பெற்றுத்தர முடியாதென தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை, இருக்கின்ற அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ளவற்றையும் இழக்கின்ற சூழலை உருவாக்கக் கூடாதென தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

அத்தோடு, மாற்றினத்தை வாழ வைத்து, தமிழினத்தைத் தாழ வைக்கும் செயற்பாடுகளில் இனிமேலும் ஈடுபடாமல் தமிழினத்தை வளம்பெறச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்கால சூழலுக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டியுள்ளதென்றும், இதனைக் கருத்திற்கொண்டே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுக்காக முயற்சிக்கின்றார் என்றும் குறிப்பிட்ட கிருஷ்ணபிள்ளை, இதில் விமர்சிக்க எதுவும் கிடையாதென மேலும் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு போராட்டம் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த கிருஷ்ணபிள்ளை, நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாகியும் அரசாங்கம் பொதுமக்களின் காணியை விடுவிக்காமலிருப்பது கவலைதரும் விடயம் என்றார்.

மேலும், பிரிவினைவாதத்தை விரும்பாது, நாட்டிலுள்ள ஏனைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அன்றிலிருந்து இன்றுவரை செயற்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்த கிருஷ்ணபிள்ளை, எனினும் கடந்த 1947ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் யாவும் தமிழ் மக்களை சகல விடயங்களிலும் புறக்கணித்த காரணத்திற்காகவே காலிமுகத்திடல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை போராட வித்திட்டதென சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளை கேட்கின்றோமே தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை என்றும் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை இதன்போது தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg