Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கு தமிழக மக்களின் கோழைத்தனமே காரணம்: புகழேந்தி

In இலங்கை
Published: 11:43 GMT, Feb 25, 2017 |
0 Comments
1537
icon_com
This post was written by : Varothayan

ஈழத் தமிழர்களின் இத்தனை இன்னல்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய எங்கள் கோழைத்தனம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடனேயே உங்கள் முன் உட்கார்ந்திருக்கின்றேன் என தமிழகத் திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

தனது 6 ஆவது திரைப்படமான ‘கடல் குதிரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இலங்கை வந்திருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜா, இன்று (சனிக்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களில் ஈழ விடுதலைப் போராட்டமும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டமும் மிகவும் உன்னதமானது எனவும் அவர் கூறினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இயக்குனர் புகழேந்தி, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழகத்தால் மட்டும் தான் முடிந்திருக்கும். வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எட்டுக் கோடி தமிழர்கள் நினைத்திருந்தால் இங்கு ஒரு இனப்படுகொலை நிகழாமல் தடுத்திருக்கலாம்.

இந்தக் குற்ற உணர்ச்சியோடு இங்கிருக்கும் மக்களைச் சந்திக்கும் போது கூனிக்குறுகி நிற்கின்றேன். என்னுடைய முதுகெழும்பையே நிமிர்த்தியது போல கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தை நேற்று பார்த்தேன்.

உலகில் அநீதி இழைக்கப்பட்ட சமூகமுகம், கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சமூகமும் ஒரு நாள் தங்கள் மௌனத்தை கலைத்துத் தான் ஆக வேண்டும். இந்த மக்கள் தங்கள் மௌனத்தைக் கலைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதன் ஆரம்பப்புள்ளியாக இந்த கேப்பாப்புலவு போராட்டத்தைப் பார்க்கின்றேன்- என்றார்.

இலங்கைக்குக்கு வருகை தந்திருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜா, நேற்று முல்லைத்தீவு – கேப்பாபுலவு சென்று, அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஏற்கனவே ‘காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற திரைப்படங்களையும் இயக்கியிருக்கும் ஈழ உணர்வாளர் இயக்குனர் புகழேந்தி தங்கராஜா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தில் இசை வெளியீடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தெல்லிப்பளை ராஜேஸ்வரி மஹாலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். அத்துடன், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கும் நடிகர் ‘தலைவாசல்’ விஜய், நடிகை ரோகினி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg