Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தொடர்பான சர்ச்சைகளுடன் ஆரம்பமாகிறது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்

In இலங்கை
Updated: 07:32 GMT, Feb 27, 2017 | Published: 04:16 GMT, Feb 27, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mangala n zaid

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வு ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த அமர்வில் பங்குபற்ற இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள தலைமையிலான குழுவொன்று நேற்று ஜெனீவா சென்றுள்ளதோடு, இன்றைய தினம் அதிகாரிகள் மட்டக் குழுவொன்றும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இத் தொடரில் இலங்கை குறித்து இம்முறை முக்கிய கவனஞ்செலுத்தப்படவுள்ளதோடு, இலங்கை மீது புதிய தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு இம்முறை மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பான விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி பேரவையில் முன்வைக்கவுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தாத நிலையில், அதற்கு மேலும் கால அவகாசத்தை கோருவதற்கு இலங்கை தயாராகியுள்ளது. எனினும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதானது நீதியை நீர்த்துப் போகச் செய்வதாக அமையுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த கால அவகாசத்தை வழங்கக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நல்லாட்சியிலும் சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பன தொடர்வதாக உண்மை மற்றும் நீதிக்கான கட்டமைப்பு கூறியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களுடனான அறிக்கையை ஐ.நா. பேரவையில் சமர்ப்பிப்பதற்கும் தயாராகி வருகிறது. அத்தோடு, பொலிஸ் காவலில் உள்ளவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான விடயங்கள் அடங்கிய அறிக்கையை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவினர் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் இலங்கையில் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதி விசாரணைகள் மற்றும் இழப்பீடுகள் வழங்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்ததோடு, இவ்விடயங்களை மனித உரிமை பேரவையில் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அத்தோடு, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், தேசிய சமாதான பேரவை உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுடன் ஐ.நா. அமர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இவ்வாறான நெருக்குவாரங்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றதென்பது கேள்விக்குறியாக இருப்பதோடு, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட அமெரிக்காவின் உதவியை ஏற்கனவே அரசாங்கம் நாடியுள்ள நிலையில், அதற்கு அமெரிக்காவின் பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பதும் உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg