Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் இலங்கை வருகையை எதிர்ப்போர் சமூகத்தின் வெற்றுத் தோட்டாக்கள்

In இன்றைய பார்வை
Updated: 13:27 GMT, Mar 28, 2017 | Published: 13:27 GMT, Mar 28, 2017 |
0 Comments
2072
This post was written by : Varshini

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கி, புதிய தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேறியுள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றை சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே 2015ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கே தற்போது இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்படுவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஏற்கனவே எடுத்துவிட்டன. பேரவையின் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களும், வாக்கெடுப்புக்களும் வெறும் சம்பிரதாய நடைமுறைகள்தான்.

இலங்கை அரசாங்கத்திற்கு போர்க்குற்றங்களை விசாரிப்பதிலோ, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக யாரையும் தண்டிப்பதிலோ எந்தளவுக்கு உடன்பட முடியும் என்பது கேள்விக்குறிதான். அதுபோலவே, தற்போதைய இலங்கை அரசாங்கத்தை கடினமாக இறுக்கிப்பிடித்து போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்றும், மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகள் வற்புறுத்தப்போவதில்லை என்பதும் வெளிப்படையாகும்.

நல்லாட்சி அரசை அழுத்தத்திற்குள் தள்ளிவிட்டால் அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பாகி விடும் என்ற அச்சம் நல்லாட்சியை ஏற்படுத்திய சர்வதேச நாடுகளுக்கு இருக்கவே செய்கின்றது. எனவே போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவையும் மனித உரிமை பேரவையில் விவாதங்களாகவே இருக்கும். ஆட்சியாளர்களும் அதனோடு பயணிப்பார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மனித உரிமைப் பேரவையை அணுகக்கூடிய பலமான நிலையில் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உப குழுக்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு ஒருசிலர் கருத்துரைப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்ற உண்மையையே நடந்து முடிந்த 34ஆவது கூட்டத் தொடர் வெளிப்படுத்தும்.

தமிழர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும், இலங்கை அரசாங்கத்தின் அளவுக்கு சர்வதேசத்தையோ, மனித உரிமைகள் பேரவையையோ கையாளக்கூடிய ஆளுமை தமிழர்கள் பக்கத்தில் இல்லை. இரண்டு விடயங்கள் தமிழ் மக்களிடையே சாத்தியமானால் ஒருவேளை அந்த வலிமையை தமிழர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

அதாவது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் ஓரணியாகி நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்து நியாயம் கேட்டுப் போராட முன்வர வேண்டும். அல்லது இலங்கையிலும், சர்வதேசத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்கள், ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இவை இரண்டும் தமிழர் தரப்பில் சாத்தியமில்லை.

எனவே தமிழர்கள் உணர்ச்சிக்கும், பரபரப்புக்கும் எடுபட்டவர்களாக காலத்துக்குக் காலம் ஏமாற்றங்களுடன் வாழ்கின்ற துர்ப்பாக்கியசாலிகளாகவே வாழ வேண்டியிருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினையாக இருக்கவேண்டுமென்பதே தமிழ்த் தலைமைகளின் அரசியல் நிலைப்பாடாக இருக்கின்றது.

தாமும் துணிச்சலாக தீர்மானங்களை எடுக்க முடியாதவர்களாக இருப்பதுடன், தீர்வுகளுக்கான திட்டங்களை வரவேற்று அதன் பலாபலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் ஆற்றலையும் இழந்தவர்களாகவே அநேகமான தமிழ்த் தலைமைகள் இருக்கின்றார்கள். இதற்கு ஒரு உதாரணமாக இலங்கைக்கு தமிழக திரை உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் வருவதாக இருந்த நிகழ்வாகும்.

ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கான அழைப்பை விடுத்த ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினரும், ஊடக அனுசரணை வழங்கிய ஆதவன் ஊடக நிறுவனத்தினரும், இந்த நிகழ்வுக்கான பரிபூரண ஏற்பாட்டாளர்களாக இருந்த லைக்கா நிறுவனத்தினரும், இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மிகப்பெரும் செய்தியை உலகுக்கு உணர்த்துவதற்காக எடுத்த மனிதாபிமான முயற்சியாகவே அது அமைந்தது.

தமிழர்களின் ஏக்கத்தையும், தற்போதைய வாழ்க்கை முறையையும் கண்டுகொள்ளாமலே தமது சுய லாபங்களுக்காக தீர்மானங்களை நிறைவேற்றியும், அதற்காக கால அவகாசம் வழங்கியும் சர்வதேசம் ராஜதந்திர போர் நடத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழர்களின் மண்ணுக்கு ஒரு உச்ச நட்சத்திரத்தை அழைத்து வருவதென்பது சாதாரண விடயமல்ல.

லைக்கா நிறுவனம் ரஜினியை அழைத்துவருவது ஞானம் அறக்கட்டளையினர் தமது நிதியில் கட்டிய 150 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மட்டுமல்ல. புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே பணம் படைத்தவர்களுக்கும் இவ்வாறு உதவி செய்யும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும், யுத்தத்திற்கு தமது வாழ்வை பறிகொடுத்த மக்கள் தமது சொந்த நிலத்தில் வாழ்வதற்காக இன்னும் குறைந்தது ஒரு இலட்சம் வீடுகள் தேவையாக இருக்கின்றன என்ற செய்தியை உலகுக்கு வெளிப்படுத்துவதற்காகவும், சர்வதேச ஊடகங்களில் தமிழர் செய்தியை ரஜினி ஊடாக பேசச் செய்வதற்காகவுமாகும். ரஜினியும், மற்றையவர்களும் அமர்ந்திருக்கும் அந்த மேடையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பணம் படைத்த தமிழர்களையும், உதவும் உள்ளங்களையும் நோக்கி மேலதிக உதவிகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருக்குமானால், அது பலரின் மனதில் பதிந்திருக்கும். அதைச் செய்வதற்கு யார் முன்வருவார்கள்? ரஜினியின் இலங்கை வருகையை எதிர்த்த தமிழக பிரகிருதிகளால் இதுவரை இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மைகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும்.

சில பிரகிருதிகள் கூறுவதுபோல், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 2.0 படத்தின் விளம்பரத்திற்காகவோ, அப்படத்தின் வியாபார தந்திரமோ இதில் இல்லை. ஏன் என்றால், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அதை எவ்வாறு பிரசாரம் செய்ய வேண்டும் என்பதும், அதை எவ்வாறு வியாபாரம் செய்ய வேண்டும் என்பதும் தெரியாததல்ல.

லைக்கா நிறுவனம் போன்ற பெரிய நிறுவனத்திற்கே ரஜினி போன்ற உலகப் பிரபலமான ஒருவரை வடக்கு கிழக்கிற்கு அழைத்துவந்து, இங்கு யுத்த வடுக்களோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மனச் சந்தோசத்தையும், ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியுமாக இருக்கும். ரஜினி வந்தால் தமிழர்களுக்கு தீர்வு தடைப்படும் என்றும், அபிவிருத்தி தடைப்படும் என்றும், குருட்டுத்தனமான பிரசாரத்தை முன்னெடுத்தவர்களை என்னவென்று கூறுவது?

ரஜினி இலங்கைக்கு வருவது சரியா பிழையா என்று ஆராய்வது அல்ல எமது நோக்கம். அப்படி ஒருவரின் வருகை, ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தாரின் சமூக அக்கறை. அவர்களின் எதிர்காலத் திட்டங்களுக்கு நாம் கொடுக்கும் உற்சாகம் என்ன என்பவற்றை சிந்திக்காத ஒரு சமூகமாக இருந்துவிட்டுப் போகின்ற சுயநலவாதிகள் தமிழ்ச் சமூகத்தின் நோயாக வளர்ந்திருக்கின்றார்கள்.

ரஜினி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்தால், அவருக்கு அருகில் தமக்கும் ஒரு ஆசனம் போட்டு மகிழ்வதில் சிலருக்கு விருப்பம் இருந்திருக்கின்றது. ஆனால் அத்தகையவர்கள் ரஜினியை வெளிப்படையாக வரவேற்கத் தயாராக இருக்கவில்லை. தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாகவும், அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் தெளிவுபடுத்தி ரஜினி வெளியிட்ட அறிக்கையில், தன்னுடன் யாரெல்லாம் நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்தார்கள் என்பதையும், எவ்விதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பதையும் தெளிவாக எழுதியிருந்தார். அதில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் எவரும் ரஜினிக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது, அதை எதிர்த்து வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

அந்த மௌனங்களைப் பார்த்தால், ‘ரஜினி வந்தால் அதில் கலந்துகொள்வோம். வராவிட்டால் தப்பியது தலை என்று இருந்து விடுவோம்’ என்றுதான் இருந்திருக்கின்றார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது. இதுதான் நமது சமூகத்தின் பெருங்குறைபாடாகும். தாம் சரி என்று எடுத்துக்கொண்ட முடிவை சரியாக்கிக் காட்டுவதற்கு முயற்சிக்காதவர்களே, இன்று தமிழ் மக்களின் தலைமைகளாகவும், கலாசார பாதுகாவலர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களால் தமிழர் சமூகம் அடையப்போகும் நன்மைகள் ஏதுமில்லை.

ஈழத்துக் கதிரவன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg