தீவு நாடான சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியா டெஸ், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை நிகோஸ் சந்தித்து  இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவை தொடங்குவது, வர்த்தக கப்பல் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குவது உட்பட 4 முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் மோடியும் நிகோஸும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச்  சந்தித்தனர். அப்போது  பேசிய பிரதமர் மோடி,

”இந்தியா சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே பல்துறை ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள், இருதரப்பு உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கிய பிரச்சினைகளில் சைப்ரஸ் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் இருக்கும். சைப்ரஸ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். மேலும், தீவிரவாதத்துக்கு தஞ்சம் அளிக்கும், உதவி செய்து வன்முறைகளின் தொழிற்கூடங்களாக இருக்கும் நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளோம்.

மேலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விரைவாக சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா, சைப்ரஸ் ஆகிய இரு நாடுகளும் விரும்புகின்றன. மேலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு சைப்ரஸ் நாடு ஆதரவு அளித்து வருகிறது. அதற்காக அதிபர் நிகோஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக சைப்ரஸ் அதிபர் நிகோஸை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து இருநாடுகளுக்கு இடை யிலான பல்துறை ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.