Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் இலங்கை அரசியலில் மும்முனைப் பலப்பரீட்சை தீவிரமடைகின்றது

In இன்றைய பார்வை
Updated: 16:15 GMT, May 5, 2017 | Published: 10:46 GMT, May 5, 2017 |
0 Comments
1914
This post was written by : Vithushagan

நடைபெற்று முடிந்த உழைப்பாளர் தின அரசியல் பலப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னமும் தென்இலங்கை அரசியல் தலைமைகளின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.  ஏற்கனவே இதே பத்திப் பக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்ததைப்போல், உழைப்பாளர் தின பலப்பரீட்சையில் மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரே வெற்றிபெற்றுள்ளனர்.

மகிந்தவின் தலைமையிலான உழைப்பாளர் தினக் கூட்டம் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வியடைந்திருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே முழு பலாபலனையும் அனுபவிப்பவராக இருப்பார். இப்போது அதுவே நடந்து முடிந்திருக்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற நான்கு உழைப்பாளர் தின நிகழ்வுகளை வெற்றியிலிருந்து வரிசைப்படுத்தினால், முதலாமிடம் மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு, இரண்டாமிடம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு, மூன்றாமிடம் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கும், அதனோடு இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும். நான்காமிடம் ஜே.வி.பிக்கும் ஒதுக்கப்படலாம்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான காலி முகத்திடல் கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்பேர் வருகை தந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. காலி முகத்திடலில் பெருமளவான மக்களை திரட்ட முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகுந்த பதலளிப்பைச் செய்துள்ளது.

அந்த மேடையில் உரையாற்றிய கம்மம்பில,அடுத்த ஆண்டு தமக்கு காலிமுகத்திடலை விடவும் பெரிய இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறியதை கவனிக்க வேண்டும். விமல் வீரவன்சவின் உரையில் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும்,முக்கியமாக திருகோணமலை எண்ணைக் குதங்களை நல்லாட்சி அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கப்போகின்றது என்றும்,இந்தியாவின் பல்வேறு அழுத்தங்களுக்குள் அகப்பட்டு இலங்கை நாடானது இந்தியாவின் அடக்குமுறைக்கு உட்படுவதாகவும் கூறியதுடன், வெசாக் தினத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் மோடிக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் தமது இல்லங்களில் கருப்புக் கொடியை பறக்கவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

விமல்வீரவன்ச இந்தக் கருத்தைக் கூறும்போது அந்த மேடையில் மகிந்த ராஜபக்சவும் இருந்தார். ஆகவே இந்தியா தொடர்பாக மகிந்தவின் சிந்தனைகளிலும் இவ்வாறான வெறுப்புனர்வு வளர்ந்து நிற்கின்றதா என்ற  கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே மகிந்தவை ஆட்சி கவிழ்ப்புச் செய்யும் சதியின் பின்னணியில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘றோ’ அமைப்பு செயற்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை மகிந்த தரப்பு முன்வைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பின்னர் உரையாற்றிய மகிந்த ராஜபக்சவின் பேச்சு கண்ணியத் தன்மையைக் கொண்டிருப்பதைவிடவும் சாதாரண மொழி நடையைக்கொண்டதாகவே அமைந்திருந்தது.அதில் நல்லாட்சி அரசாங்கத்தை சாடியதாக அமைந்தபோதும் பெரும்பாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாக்குகின்ற நோக்கத்தையே காணமுடிந்தது.

சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மைத்திரி மேற்கொண்டார் என்றும், தற்போதும் கட்சிக்காக உழைத்தவர்களையும், கட்சியின் விசுவாசிகளையும் கட்சியிலிருந்து விலத்திவிட்டு,தனக்கு ஜால்ரா போடுகின்றவர்களையும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு துணைபோகும் தனது முயற்சியை கேள்விக்குட்படுத்தாமல்,தனது தாளத்திற்கு தலையை ஆட்டும் பொம்மைகளாக இருக்கக்கூடியவர்களையுமே சுதந்திரக்கட்சியில் இணைத்துக்கொண்டும் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

அது தவிரவும் இந்த அரசாங்கம் நாட்டைப் பிரிக்கும் அல்லது புலிகளின் கனவை நிறைவேற்றும் அரசியல் திருத்தச் சட்டங்களை முன்வைக்குமாக இருந்தால் அதை எதிர்த்து சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்றும் அரசுக்கு எதிராக போராட வேண்டிய தருணத்தில், தாம் மக்களுக்கு அந்த அழைப்பை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் நாட்டுக்காகப் போராடி தமது அங்கத்தை இழந்தவர்களையும்,வலுவிழந்தவர்களையும் மறந்து அவர்களை தெருவில் கொடூரமாகத் தாக்கியும் ஆட்சி நடத்துவோரின் தலையில் இடி விழும் என்றும் கூறியதுடன் தனது உரையின் இறுதிப்பகுதியில் தமிழில் சில வார்த்தைகள் பேசினார். அதில் தமிழ் மக்களுக்கு விமோசனம் தம்மிடமே இருக்கின்றது என்றும் தன்னிடம் வாருங்கள் என்றும் கூறினார்.

மகிந்தவின் உரையில் நாம் கூறியவற்றை மறுபக்கமாக ஆராய்ந்தால் அரசாங்கம் அரசியல் திருத்த யோசனையை கொண்டுவந்தால் அதை எதிர்ப்பார்கள் என்பதும்,சிங்கள மக்களையும் தூண்டிவிடுவார்கள் என்பதும் தெளிவாகின்றது. அதபோல் நல்லாட்சியாளர்களின் தலையில் இடி விழும் என்று கூறியதைப் பார்த்தால்;,தமிழர்களின் படுகொலைகளை ஆரம்பித்துவைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் கூறியதுபோல் அரசுடன் இணக்க அரசியல் நடத்துகின்ற துரையப்பா போன்றவர்களுக்கு இயற்கை மரணம் இல்லை என்பதைப்போலவே மகிந்தவின் இந்தக் கூற்றும் அமைந்துள்ளது.

உழைப்பாளர் தினத்திற்குப் பின்னர் மகிந்தவின் எழுச்சியின் வீச்சு அதிகரித்துள்ளது. இதனால் ஜனாதிபதி மைத்திரியின் எதிர்காலம் பற்றிய அச்சங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மைத்திரிபாலவுடன் ஒட்டியிருக்கும் அரசியல் கட்சிகளும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், நாளைக்கு காட்சிகள் மாறும்போது மகிந்தவுடன் சமரசம் செய்து கொள்ளமுடியும். ஏன் என்றால் அவர்களுக்கு மகிந்தவுடன் இன்றிருக்கும் இடைவெளியானது அரசியல் ரீதியான பிரச்சினையாகவே இருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதி மைத்திரியைப் பொறுத்தவரை மகிந்தவுடன் அரசியல் முரண்பாடு என்பதைவிடவும், தனிப்பட்ட பகையே முதன்மையானதாகும். மகிந்த அதிகாரத்திற்கு வருவாராக இருந்தால் அது மைத்திரியின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்திலிருந்தே பிரச்சினைகள் தொடங்குவதாக அமையும். எனவே மீண்டும் மகிந்தவை ஆட்சியதிகாரத்திற்கு வரவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

அதைச் செய்வதற்கு இருக்கும் ஒரே மார்க்கம் இன்று இருப்பதைப்போல் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதுதான்.அப்படியாயின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விட்டுக்கொடுப்புடனும்,இணக்கத்துடனும் பயணிக்க வேண்டும் என்ற தர்மசங்கடத்தை ஜனாதிபதி தாங்கிக் கொள்வதுதான்.

மகிந்தவின் பலம் எழச்சியோடு காலிமுகத்திடலில் வெளிப்பட்டால்,இவ்வாறான ஒரு நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்படுவார் என்பது ஏற்கனவே பிரதமர் ரணில் போட்ட கணக்குத்தான். அந்தக் கணக்கு இன்று சரியாகியிருக்கின்றது.இன்னும் நிறைவேற்று அதிகாரங்களுடனான ஜனாதிபதியாகவே மைத்திரிபால சிறிசேனா இருந்தாலும்,ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை தொடர்பாகவோ,பிரதமரின் முடிவுகள் தொடர்பாகவோ பெரிதாக தலையீடு செய்ய முடியாதவராகவே ஜனாதிபதி இருக்கவேண்டிய நிலைமை ஏற்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வாறு சுதந்திரக் கட்சியினர் சமரசத்துடன் நல்லாட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக சுதந்திரக் கட்சிக்குள் உள்ளக விவாதங்கள் நடைபெறத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

ஜனாதிபதியுடன்  இருக்கும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்துகொண்டு அதிகாரமில்லாத அதிகாரத்தில் பங்காளிகளாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்து மேலோங்கியிருக்கின்றது.

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் என்றும்,சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுக்கும் நிலைக்கு கட்சியை வைத்திருப்பவர்கள் என்றும் ஒன்றினைந்த எதிர்க்கட்சியினர் கூறுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி சுதந்திரக் கட்சியை அழித்த துரோகிகளாக மக்கள் மத்தியில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்ற கருத்தக்களும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்களினால் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான நெருக்கடிகள் தலைதூக்கியிருக்கும் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தங்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்ப்புகள்,நாட்டின் பொருளாதார சவால்கள், தொழிற்சங்கங்களின் அழுத்தங்கள் என்று பலமுனைகளில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் நபராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இருக்கின்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், நாட்டின் அரச இயந்திரத்தை நேர்த்தியாக நகர்த்துவதற்குமான முயற்சியில் பிரதமர் தீவிரம் காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் மகிந்த, மைத்திரி இழுபறியில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியதிகாரத்தில் நீடித்திருக்கச் செய்வதே பிரதமரின் குறிக்கோளாக இருக்கின்றது.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு சட்ட வரைபை வரைய அமைக்கப்பட்டபிரதமர் ரணில் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் இதுவரை என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பதை ஒரு வரைபாக எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் இவ்வாறு தெரிவித்திருப்பதற்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், இன்னும் இரண்டு வாரத்திற்குள் அரசாங்கம் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்திருப்பது தமிழ்மக்களிடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஈழத்துக்கதிரவன்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg