Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

9 அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்! – நிதியமைச்சு கைமாறியது

In
Updated: 06:08 GMT, May 22, 2017 | Published: 04:23 GMT, May 22, 2017 |
0 Comments
3147
This post was written by : Varshini

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக நிதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய ஒன்பது அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இராஜாங்க அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சுப் பதவியில் இருந்த மஹிந்த அமரவீரவுக்கு, மேலதிகமாக இராஜாங்க அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றவர்கள் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புதிய அமைச்சுப் பொறுப்புக்களின் விபரம்

♦ நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – மங்கள சமரவீர

♦ வெளிவிவகார அமைச்சர் – ரவி கருணாநாயக்க

♦ பெற்றோலிய வளத்துறை அமைச்சர் – அர்ஜூன ரணதுங்க

♦ துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் – மஹிந்த சமரசிங்க

♦ சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர் – எஸ்.பி.திஸாநாயக்க

♦ காணி மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சர் – கயந்த கருணாதிலக்க

♦ தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் – டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன

♦ திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் – சந்திம வீரக்கொடி

♦ அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சர் – திலக் மாரப்பண

♦ மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – மஹிந்த அமரவீர

நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை மாற்றம்! (1ஆம் இணைப்பு)

நல்லாட்சி அரசாங்கத்தின் தீர்மானம் மிக்க முதலாவது அமைச்சரவை மாற்றம் இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும் பிரதருக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற விசேட சந்திப்பைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்கனவே ஜனாதிபதியும் பிரதமரும் பச்சைக் கொடி காட்டியிருந்த நிலையில், நேற்றைய சந்திப்பிலும் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போதைய அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் போது நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு போன்ற முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறுமென அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவி கைமாறும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் குறிப்பாக பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களில் நிதியமைச்சு மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை குறித்தும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுமார் மூன்று மாத காலங்களுக்கு மேலாக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேசப்பட்டு வந்தது.

அத்தோடு, அண்மைய மே தினக் கூட்டம் நல்லாட்சி அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகள் தம்மை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அமைச்சரவை மாற்றமானது, உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தியதாகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg