Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து மூதூரில் பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 07:30 GMT, May 28, 2017 | Published: 07:30 GMT, May 28, 2017 |
0 Comments
1630
This post was written by : Ravivarman

வெருகல் மற்றும் மூதூரை அண்டிய பகுதிகளில் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்து, பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் வீரமாநகர் முருகன் ஆலயத்தின் முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான இவர்கள் தம்மை இயக்கர், நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக கருதிவருவதுடன் இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளாக இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “எம்மில் ஒரு பிரிவினர் மஹியங்கனையை அண்டிய பகுதிகளிலும் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் வாழ்ந்து வருகின்றோம்.

யுத்தத்தினால் இடப்பெயர்வைச் சந்தித்த பின்னர் மீண்டும் நாம் இப்பகுதிகளில் குடியேறிய நிலையில், சிலரின் திட்டமிடப்பட்ட பொருளாதார சுரண்டல் காரணமாக இன்று நல்லூர் மற்றும் உப்பூறல் ஆகிய கிராமங்கள் முற்று முழுதாக எமது கைகளை விட்டுப் பறிபோய்விட்டன.

அத்துடன் உல்லைக் குளமும் 700 ஏக்கர் வயற்காணிகளும் எம்மிடமிருந்து அடாவடியாகப் பறிக்கப்பட்டிருப்பதுடன், எமது மேய்ச்சல் நிலங்கள் அவர்களது தென்னந் தோப்புகளாகியிருக்கின்றன.

மேலும் எமது மேட்டு நிலங்கள் அவர்களது முந்திரிகைத் தோட்டங்களாகியிருக்கின்றன. இச் செயற்பாடுகளுக்கு சில அரசியல்வாதிகளின் பின்புலமும் துணைபோகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கிராமம் பின்தங்கிய பகுதியில் காணப்படுவதால், இப் பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் எவரும் வருவதில்லை என்பது இம் மக்களின் பாரிய குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அமைதியான முறையில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் கலைந்து சென்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

IMG_0705 IMG_0704 IMG_0702

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg