திருகோணமலையில் இடம்பெறவுள்ள வர்த்தகக் கைத்தொழில் சந்தை
திருகோணமலை மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வர்த்தகக் கைத்தொழில் சந்தை எனும் மாபெரும் கண்காட்சி ஒன்றை நடத்த உத்தேசித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.குலதீபன் தெரிவித்தார்.
குறித்த கண்காட்சிக்கான ஒப்பந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்றையதினம் (சனிக்கிழமை) திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தில் இடம்பெற்றது.
அதன்பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளார்களின் தொழிற்துறைகள் தொடர்பான 300 கண்காட்சிக் கூடங்கள் நிறுவப்படவுள்ளதோடு, நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் காணப்படும்.
மேலும் இதன்மூலமாக மிகுந்த பின்னடைவிலுள்ள திருகோணமலை மாவட்டத்தின் தொழிற்துறையினை மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தின் தொழிற்துறையிலும் பாரிய முன்னேற்றத்தினை நாம் அடையமுடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.