வட மாகாண சபையில் கூட்டமைப்பு இரு அணியானால் அது தமிழருக்கு அவமானம்!
யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிலைமைகளை பார்க்கும்போது உலகமெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு தலைசுற்றிப் போயிருக்கும்.
விடுதலைப் புலிகள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தத் தலைமையாக பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையைப் பொறுப்பேற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அங்கே ஒரு அரசியல் பிரளயத்தை தோற்றுவித்துள்ளது.
அதிகாரத்துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடி எனும் குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உத்தரவிட்டதை ஏற்றுக்கொள்ளும் அரசியல் அவதானிகள், மேலும் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் இரண்டு அமைச்சர்களையும் விசாரணைகள் நடைபெறும் காலம்வரை கட்டாய விடுமுறையில் இருக்குமாறும், அந்த அமைச்சுக்களை தாமே பொறுப்பில் எடுத்தக் கொள்ளுமாறும் முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், முதலமைச்சருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு முதலமைச்சருக்கு ஆதரவான அணி என்றும், எதிரான அணி என்றும் இரண்டு அணிகள் தோற்றம் பெற்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்களான குருகுலராஜாவும், ஐங்கரநேசனும் தாம் அமைச்சுப் பொறுப்புக்களை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறியிருந்தார்கள். மறுபக்கத்தில் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்களான டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோருக்கு கட்டாய விடுமுறை எடுக்குமாறு முதலமைச்சர் கூறியிருக்கும் அறிவித்தலை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
மாகாணசபையில் இவ்வாறு அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பிரச்சினைகளை வளர்த்துக்கொண்டு இருந்தால், அவர்களின் தலைவர்கள் தலையிட்டு அந்தப் பிரச்சினைகளை சமரசம் செய்யாமல் என்ன செய்கின்றார்கள் என்றும், இத்தோடு எதிர்காலத்தில் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு தமிழ்மக்களிடம் போகப்போவதில்லையா? என்ற கேள்விகளைத் தொடர்ந்து தலைமைகள் இவ்விடயத்தில் தலையிடத் தொடங்கின.
தேர்தலுக்குப் பின்னர் நான்கு வருடங்களாக வடக்கு மாகாணசபையின் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்துவந்தவர்கள், பிரச்சினைகள் முற்றிப்போயுள்ள தற்போதைய நிலையில் தலையீடு செய்து சமரசத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற சூழல் இருக்கவில்லை.
அதற்கிடையே முதலமைச்சரின் எதிர் அணியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 15பேரும், எதிர்க்கட்சியினர் வரிசையில் இருப்போரில் ஈ.பி.டி.பியினர் தவிர்ந்த ஆறுபேரும் சேர்ந்து இரவோடு இரவாக அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் ஆளுநரிடம் சென்று முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு சபையில் பெரும்பான்மை பலம் இல்லை என்றும் ஒரு பிரேரணையை கையளித்திருந்தார்கள். இது தமிழரசுக் கட்சியின் அவசரப்பட்ட முடிவாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழரசுகட்சியினரும், தென் இலங்கை அரசியல் கட்சிகளும் சேர்ந்து வடக்கு தமிழ்மக்களின் அமோக வாக்குகளால் முதலமைச்சராக்கப்பட்ட விக்கினேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? என்ற ஆதங்கம் தமிழரசுக்கட்சி மீது பெரும் தீயாக சுவாலை விடத்தொடங்கியது.
கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினையை தீர்வுக்குக் கொண்டுவர முயற்சித்தபோதும், இவ்விடயத்தை அரசியல் சுனாமியாக மாற்றுவதற்கு முற்பட்டவர்கள், இவ்விடயத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டு தமிழரசுக் கட்சி ஒரு அணியாகவும், முதலமைச்சர் ஒரு அணியாகவும் பிரச்சினையை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.
தமிழரசுக்கட்சி, கட்சி அமைப்புடன் செயற்பட்டு மாகாணசபையை கைப்பற்றி முதலமைச்சர் பதவியையும் கைப்பற்றப் போகின்றது என்பதால் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் ஒரு கட்சிப் பின்னணி வேண்டும் என்றும், அந்த கட்டமைப்பு அவருக்காக களத்தில் போராட வேண்டும் என்றும் பரப்புரை செய்தார்கள்.
இளைஞர்கள் சிலர் முதலமைச்சர் இப்போதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்கள். அந்தக் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கோரிக்கையை பரிசீலனையில் வைப்பதாகக் கூறிவிட்டார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழ்மக்கள் பேரவையை முன்நிறுத்தி முதலமைச்சருக்கு ஆதரவான குரல்களை தமக்கு சார்பாக அணிதிரட்ட வேண்டும் என்ற திட்டம் மறுபக்கத்தில் அரங்கேற்றப்பட்டது. தமிழ்மக்கள் பேரவை சில அரசியல் கட்சிகளை உள்ளடங்கியிருந்தாலும், பெரும்பாலும் புத்திஜீவிகளும், சிவில்சமூகப் பிரதிநிதிகளுமே அதில் அங்கம் வகிக்கின்றார்கள்.
தற்போதைய நிலையில் தமிழ்மக்கள் பேரவை எனும் போர்வையில் களம் இறங்கியிருப்போரில் பேரவையின் உன்மையான உறுப்பினர்கள் இடம்பெறவில்லை. சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோரின் தலைமையிலான இரு அரசியல் கட்சிகளே தம்மை தமிழ்மக்கள் பேரவையினர் என்று கூறிக்கொண்டு முதலமைச்சருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால் என்று கூறிக்கொண்டு நிலைமையை தீவிரத் தன்மையை நோக்கித் தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். இது “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற நிலைமைதான்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழரசுக்கட்சியை தமிழ்மக்களின் விரோதக் கட்சியாகவும், ஒற்றுமைக்கு எதிரான கட்சியாகவும் தமிழ் மக்களின் முன்னால் நிறுத்திவிட்டால் தமிழ் மக்களின் அடுத்த தலைமையாக தம்மை அந்த இடத்தில் பொறுத்திக்கொள்ள முடியும் என்ற அரசியல் சூழ்ச்சிகள் ஒரு பக்கமாகவும், தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தமிழ்த் தீவிரவாதியாக தெரியும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்திவிட்டால் தம்மைப் பிடித்திருந்த தலையிடி விட்டது என்ற சதிகள் இன்னொரு புறமாகவும் சம்பவங்கள் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தச் சதிகளை எதிர்கொண்டு முதலமைச்சராக நீடிப்பாராக இருந்தால், அதில் தாமே அமைச்சர்களாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் தனி ஒரு அணியாகவே மாகாணசபையில் இருப்பதை விரும்பும் ஒரு தரப்பும், விக்கினேஸ்வரன் இந்த அவமானங்களுக்கு முகம்கொடுக்க விரும்பாமல் தாமாகவே ஒதுங்கிவிட்டால், தமக்குள் முதலமைச்சர் பதவியையும், அமைச்சுப் பொறுப்பக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற கனவுகளுடன் இன்னொரு தரப்பும் இரவோடு இரவாக கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டும் இருக்கின்றன.
இதற்கிடையே தமக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன், எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும் தொடர்ந்தும் மாகாணசபையில் மக்கள் பணி ஆற்றுவேன் என்று கூறினார். ஆனால் பதினைந்து பேரே தமக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியைது; தவிர்த்து தனித்து ஆட்சி அமைப்பதாக இருந்தால், 38பேர் கொண்ட வட மாகாணசபையில் 20பேரின் ஆதரவு தேவை. இந்த நிலையில் முதலமைச்சர் மேலதிகமாகத் தேவைப்படும் 5 உறுப்பினர்களின் உதவிளை திரட்டிக்கொள்ள வேண்டும்.
அந்த முயற்சி தோல்வியடையுமாக இருந்தால் விக்கினேஸ்வரன் ஆட்சி அமைக்க முடியாது. அதேவேளை சிவஞானம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினரும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பார்களா என்பதை ஆராய வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆட்சி கவிழ்ப்புக்காக சிவஞானத்துடன் சேர்ந்து ஆளுனநரிடம் மகஜர் கையளித்திருந்தாலும் அவர்கள் சிவஞானம் அணியினர் ஆட்சி அமைக்க சிவஞானத்திற்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றே தெரிகின்றது.
எதிர்க்கட்சியினருடன் அமைச்சரவையைப் பகிர்ந்து கொண்டாவது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சிவஞானம் தலைமையிலான அணியினர் முயற்சி செய்தால், அதை தமிழ்மக்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பதும், எதிர்காலத்தில் தமிழ்மக்களிடம் தமிழரசுக் கட்சிக்கான வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆராயமல் தமிழரசுக் கட்சி அத்தகைய முடிவுக்கு அவசரப்படாது என்று நம்பலாம்.
இந் நிலையில் விக்கினேஸ்வரன் 15 பேருடனும், சிவஞானம் 16 பேருடனும் சபையில் என்ன செய்யப்போகின்றார்கள். மிகுந்த சகிப்புத் தன்மையுடன் அதாவது “சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடவும், சண்டைக்காரன் காலில் விழுவது மேல்” என்பதுபோல் இருதரப்பம் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஆட்சியமைக்க முன்வராவிட்டால் ஆளுனநர் மாகாணசபையை கலைத்துவிடுவார்.
இரு அணிக்குள்ளும் இணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், குற்றம் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும், என்றும் ஏனைய இரு அமைச்சர்களும் வேண்டுமாக இருந்தால் கட்டாய விடுப்புக்கு அனுப்பப்படாமல் பதவியில் நீடிக்கலாம் என்ற முதலமைச்சரின் தீர்ப்பையாவது தமிழரசுக் கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ற முடிவுக்கு முதலமைச்சர் வருவதும், முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுனரிடம் கையளித்த மகஜரை தாம் மீண்டும் பெற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்திற்கு வருவதுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.
அதேவேளை வடக்கு மாகாணசபையின் சர்ச்சை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ள நிலையில் அங்கு இணக்கம் காணப்படும் சமரசமானது ஊழலை மூடி மறைப்பதாகவோ, குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது என்பதையும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைப்பொறுப்புடன் சேவையாற்ற வேண்டும் அதிகாரத்தை உதாசீனம் செய்து தான்றோன்றித்தனமாக நடக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் தீர்வு அமைய வேண்டும்.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து தூற்றுகின்ற நிலையில் வடக்கு மாகாணசபையில் இவ்வாறு தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.
– ஈழத்துக்கதிரவன் –