பிரேசிலில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி!
பிரேசிலின் சாவோ பாலோ (Sao Paulo) நகரில் ஓரினச்சேர்க்கையாளர்களின் 21ஆவது வருடாந்த பேரணி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த பேரணியில், நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.
பிரேசிலில் நடத்தப்படும் குறித்த பேரணியே ஓரினச்சேர்க்கையாளர்களின் சார்பில் நடத்தப்படும் மிகப் பாரிய பேரணியாகத் திகழ்வதுடன், குறித்த பேரணியில் கலந்துகொள்ளும் பொருட்டு உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரள் திரளாக வருகை தருவது வழக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி 10.00 மணியளவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமையை வலியுறுத்தி நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இருபால் சேர்க்கை கொண்டவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கான சம அந்தஸ்து தொடர்பிலும் குறித்த பேரணியின் போது குரல் எழுப்பப்பட்டுள்ளது.
குறித்த பேரணி கடந்த 1997 ஆம் ஆண்டு முதலாவது முறையாக நடத்தப்பட்டது எனவும் அதன் போது சுமார் 2000 பேர் கலந்துகொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களின் பேரணியில் வண்ண வண்ண ஆடையில் தோன்றிய ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், கின்னஸ் சாதனை ஒன்றையும் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.