பிரதமர் தெரேசா மேயை சந்திக்கவுள்ளார் அயர்லாந்தின் புதிய பிரதமர்

அயர்லாந்தின் புதிய பிரதமரான லியோ வராத்கர் (Leo Varadkar) இன்று (திங்கட்கிழமை) பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை நேரில் சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்பு டவுனிங் ஸ்ரீற் 10 ஆம் இலக்க இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மேயின் கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் ஜனநாயக ஒன்றியக் கட்சியை கூட்டிணைப்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன் போது, பிரெக்சிற் மற்றும் வடக்கு அயர்லாந்தின் அதிகார பகிர்வு நடவடிக்கையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக்கு இடையில் உள்ள நெருங்கிய உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என லியோ வராத்கர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், குறித்த உறவுகளை வலுப்படுத்த அவர் இந்த சந்திப்பை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.