Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா கொலை விவகாரம்: பொலிஸ் அதிகாரிக்கு கடும் எச்சரிக்கை

In இலங்கை
Updated: 05:30 GMT, Jul 5, 2017 | Published: 05:24 GMT, Jul 5, 2017 |
0 Comments
2208
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
court5-356x220

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமார் பற்றி தெரியாதென குறிப்பிட்ட வழக்கின் 19 ஆவது சாட்சியான பொலிஸ் அதிகாரியை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேராவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வழக்கின் 9ஆவது சந்தேகநபரை தான் கைதுசெய்யவில்லை என்றும் அவர் தொடர்பாக தனக்கு தெரியாதெனவும் தொடர்ந்து குறிப்பிட்டதையடுத்து, மன்று அவரை கடுமையாக எச்சரித்தது.

மாணவி வித்தியாவின் கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் கடந்த 28ஆம் திகதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) 5ஆவது நாள் சாட்சியப்பதிவின் போது பல விடயங்கள் மன்றில் தெரிவிக்கப்பட்டன.

வித்தியாவின் மூக்குக் கண்ணாடி

வழக்கின் 14ஆவது சாட்சியமான கைத்தான்பிள்ளை ஜூட்ஸ் என்பவர் சாட்சியமளிக்கையில், யாழ்.நகர் பகுதியில் மூக்கு கண்ணாடி விற்பனை நிலையம் வைத்துள்ள தன்னிடம், குற்றத்தடுப்பு புலனாய்வு துறையினர் ஒரு மூக்கு கண்ணாடி ஒன்றினை கொடுத்து அது தொடர்பில் பரிசோதனை செய்யுமாறு கூறியதாகவும், குறித்த கண்ணாடியின் வலது கண் பக்கவில்லை சாதாரண வில்லையாகவும், இடது கண் வில்லை பார்வை குறைபாடு உடையவர்களுக்கான வில்லையாகவும் காணப்பட்டதெனவும் குறிப்பிட்டார்.

அதன்போது பிரதி சொலிஸிடர் ஜெனரல் அந்த கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டார். அதற்கு சம்மதித்த சாட்சி, தான் பரிசோதித்த கண்ணாடியை அடையாளம் காட்டினார்.

முகம் வீங்கி இருந்தது

வழக்கின் 19 ஆவது சாட்சியமான, சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியமளிக்கையில், வித்தியாவின் தாயாரது முறைப்பாட்டின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் அநோசியஸ் தலைமையிலான பொலிஸ் குழு சென்று தேடுதல் நடத்தியதாக குறிப்பிட்டார். எனினும், காணாமல் போன தினத்திற்கு மறுநாள், அதாவது 2015ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அவசர பொலிஸ் இலக்கமான 119 இலக்கத்திற்கு தொலைபேசியில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பெண் பிள்ளை ஒருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றதாக குறிப்பிட்டார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆலடி சந்தி பகுதி 22 கிலோ மீற்றர் தூரம் என்றும், ஆலடி சந்தியில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, வெள்ளை துணியினால் மூடப்பட்டு சடலம் காணப்பட்டதாகவும் அதனை வித்தியாவின் தாயார் அடையாளம் காட்டியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் சட்ட வைத்திய அதிகாரி, ஊர்காவற்துறை நீதவான், தடயவியல் பிரிவு, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் துணி நீக்கப்பட்டு சடலத்தை பார்த்தபோது அலங்கோலமாக காணப்பட்டதாக மன்றில் விபரித்தார்.

குறிப்பாக முகம் மற்றும் உடம்பு வீங்கி விகாரமடைந்து காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இரத்தக் கறையுடன் ரீ சேட்

வித்தியாவின் தாயாரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் கைதுசெய்ததோடு, அவர்களது வீட்டில் இரத்தக் கறையுடன் காணப்பட்ட ரீ சேட் உள்ளிட்ட சில தடயப் பொருட்களை மீட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஐவரை கைது செய்தேன்

இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் உள்ளனர் என கிடைத்த தகவலின் பிரகாரம், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரையும் கைதுசெய்ததாக குறிப்பிட்டார்.

காவலரண் சுற்றிவளைப்பு

கைதுசெய்யப்பட்டவர்களை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் வைத்து அவர்களின் வாக்குமூலங்கங்களை பதிவுசெய்து கொண்டிருந்த வேளை, ஊர் மக்கள் ஒன்றுகூடி காவலரணை சுற்றி வளைத்து சந்தேகநபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை தாங்களே கொல்ல வேண்டும் என கூறியதாகவும் 19ஆவது சாட்சியாளர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு கருதி கடல் மார்க்கமாக சென்றோம்

சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி, அதிவிரைவு படகு ஒன்றில் சந்தேக நபர்களை ஏற்றி கொண்டு காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டுசென்று, அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று, அங்கு சந்தேகநபர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.

சுவிஸ் குமார் தொடர்பில் தெரியாது

மே மாதம் 20ஆம் திகதி தான் பணியாற்றிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற வேளை வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவரின் பெயர் சுவிஸ்குமார் எனவும் தன்னிடம் கூறியதாகவும் அதன்போதே அவர் பற்றி தெரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்களை அடையாளம் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து சான்றுப் பொருட்களையும் வழக்கின் முதல் எட்டு எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய எதிரிகளை அடையாளம் காட்டினார்.

சாட்சிக்கு கடும் எச்சரிக்கை

ஒன்பதாவது எதிரியை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டதற்கு, தான் அவரை கைதுசெய்யவில்லையென குறிப்பிட்டார். அதனை அடுத்து மன்று குறித்த பொலிஸ் அதிகாரியை கடுமையாக எச்சரித்ததோடு, ஒன்பதாவது சந்தேகநபர் குறித்து மறைக்க முயல்வதாகவும் குறிப்பிட்டது.

தமிழ்மாறன் சாட்சியமளித்தார்

வழக்கின் 25ஆவது சாட்சியமான சட்டத்தரணியும், சிரேஷ்ட சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனும் நேற்றைய தினம் சாட்சியமளித்தார்.

புங்குடுதீவை சேர்ந்த அவர், அன்றைய சூழ்நிலை தொடர்பாக மன்றில் விரிவாக விளக்கியதோடு, பொலிஸில் சரணடைய சுவிஸ்குமார் விருப்பம் தெரிவித்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டதாக பொலிஸார் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைவாக தன்னுடைய வாகனத்தில் 9ஆவது சந்தேகநபர் மற்றும் அவரது குடும்பத்தாரை யாழ். பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், நேற்றைய தினம் விசாரிக்க முடியாமல் போன மூன்று பொலிஸ் சாட்சியங்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg