Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாற்றுத் தலைமையும்,தமிழ் மக்களின் அரசியல் பயணமும் முடிவற்றதாகவே இருக்கும்!

In சிறப்புக் கட்டுரைகள்
Published: 19:37 GMT, Jul 21, 2017 |
0 Comments
1495
icon_com
This post was written by : Vithushagan
TNA

தமிழர்களுக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கியிருக்கும் புத்திஜீவிகள்,மாவட்டம் மாவட்டமாக கூட்டங்களை நடத்தியும்,கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டும் இருக்கின்றார்கள்.

மாற்றுத் தலைமை தேவை என்போருக்கும் யார்? அந்தமாற்றுத் தலைமை என்பதை திட்டவட்டமாக அடையாளங்காட்ட முடியவில்லை.இந்த நிலையானது இருட்டு அறைக்குள் கருப்புப் பூனையை தேடுவதற்கு ஒப்பானதாகவே இருக்கின்றது.

அன்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தமிழ் மக்களின் அதிருப்திகளும்,கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிடையே ஒற்றுமையின்மையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளதே மாற்றுத் தலைமை ஒன்றுக்கான தேடலுக்கான காரணமாக அமைந்துள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமிழ மக்களின் தலைமை அரசியல் அமைப்பாக இது நாள்வரை உள்நாட்டிலும்,சர்வதேசதத்திலும் கருதப்பட்டது. 2015 ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் தென் இலங்கை அரசுடன் இணக்கமான அரசியலை நடத்தவும்,அரசாங்கத்தின் சலுகைகளையும்,வரப்பிரசாதங்களை பங்குபோட்டுக்கொள்ளவும் ஆரம்பித்ததில் இருந்து கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய கூர்முனை மழுங்கிப் போகத் தொடங்கியது.

தமிழ்மக்களின் முக்கியத்துவம் மிகுந்த பிரச்சினைகளை ஆட்சிமாற்றத்தின் ஊடாக தீர்த்துக்கொள்ளமுடியும் என்று தமிழ்மக்களுக்கு கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிமாற்றம் நடந்து இரண்டரை வருடங்களாகிவிட்ட போதும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பதும்,அரசாங்கத்தைப் பாதகாப்பதற்கு கூட்டமைப்பு உள்ளேயும்,வெளியேயுமாக செயற்படுவதையும் தமிழ்மக்கள் ஏமாற்றமாகவே கருதுகின்றார்கள்.

அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றது என்றும்,அதற்காக தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பது அவசியம் என்றும் கூட்டமைப்பின் தலைமை கூறினாலும்,புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கான சூழல் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் இலகுவான காரியமல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தியதன் பின்னரே தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கமுடியும் என்றும்,அரசியல் தீர்வுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை தளர்த்தி ஏனைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை என்றும் கூட்டமைப்பின் தலைமை கூறுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது கடந்த இரண்டரை வருடங்களாக மக்களிடையே புகைந்து கொண்டிருந்த எதிர்ப்புனர்வு எனும் நெருப்பை அன்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் பேசியவார்த்தைகள் ஊதிவிட்டு எரியச் செய்துள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தசம்மந்தன்,நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வற்புறுத்தலின் பெயரில் அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

அங்கு சென்ற சம்மந்தனின் காலில் சிலர் விழுந்து அழுததும், சிலர் கண்ணீர்விட்டு கதறியதும் நெகிழ்வானவிடயங்கள்தான். அங்கு சம்மந்தன் அல்ல யார் சென்றாலும் அவர்களின் காலில் விழுந்து கண்ணீர்விட்டு அழுவதைத் தவிர காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் இன்றை தமிழ்மக்களின் நிலைமையாகும்.

அவர்களிடத்தில் உரையாற்றிய சம்மந்தன்,காணாமல் போனவர்களின் விடயத்தை அரசாங்கத்திடம் கடுமையான தொனியில் முன்வைக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். சம்மந்தனின் அந்த பேச்சு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை எரிச்சலடையச் செய்திருந்தது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அனுசரனையுடன் நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற்று இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது. சம்மந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவி உள்ளடங்கலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைமைப் பொறுப்புக்கள்,சொகுசுவாகனங்கள் என்பவற்றைப் பெற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன.

இத்தனையையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையா? என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளானநாங்கள் நீதிகேட்டுப் போராட்டத்தை ஆரம்பித்து150 நாட்களாகின்றது இவ்வளவு நாளும் கண்டுகொள்ளாமல், இப்போது கூட எமக்கான தீர்வைக் கொண்டுவராமலும் எம்மிடம் வந்து இனிமேல் இவ்விடயம் தொடர்பாக அரசிடம் கடுமையான தொனியில் கதைக்கப்போவதாகக் கூறுவது நாம் எதிர்பார்த்தபதில் இல்லை என்று அந்தமக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை புதிய அரசியலமைப்பை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கின்றது. நாட்டின் போக்கைப்பார்த்தால் புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் மிகமிக அரிதாகவே இருக்கின்றது. ஒரு வேளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்படுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலஅரசியல் என்னவாகும் என்பதே தற்போது எழுந்திருக்கும் கேள்வியாகும்.

தொடர்ந்து வாக்குறுதிகளை வழங்கி வந்த கூட்டமைப்பு இப்போது வாக்குறுதிகளில் உச்சியில் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு இருக்கின்றது. அதுவும் நிறைவேறாவிட்டால் அடுத்து தமிழ் மக்களிடம்  திரும்பி வரமுடியாமல் பாதாளத்தில் விழும் நிலைமை ஏற்படலாம் அத்தகைய அரசியல் முள்ளிவாய்க்காலைச் சந்திக்க முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான இன்னொரு தலைமையைத் தேடிக்கொள்ளவே சிலர் எத்தனிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து எட்டு வருடங்களாகின்ற போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வெற்றிகளை நோக்கி முன்னகரவில்லை. இந்நிலையில் எதிர்காலத்திலும்,தமிழ்த் தேசிய உணர்ச்சியையும்,அரசாங்கஎதிர்ப்பு வாய்ச் சவால்களையும் மட்டும் கூறி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியது என்பதை கூட்டமைப்பிலுள்ளபங்காளிகள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதானஅதிருப்திகள் அதிகரித்துவரும் நிலையில் தமிழ் மக்களிடையே பிராந்திய அரசியல் கட்சிகளின் செல்வாக்கைகேள்விக்குட்படுத்துவிதமாக தேசிய கட்சிகளின் ஆதிக்கமும் அன்மைக்காலமாக வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

எனவேதான் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய அரசியல் வழிமுறையிலிருந்து விலகி யதார்த்த அரசியலின் பக்கமோ அல்லதுதேசிய அரசியலின் பக்கமாகவோ செல்லவிடாமல் வைத்திருப்பதற்கு சம்மந்தன் தலைமையைத் தவிர்த்துமாற்று அரசியல் தலைமை ஒன்றின் அவசியத்தை உணர்த்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சம்மந்தனுக்கு மாற்றாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாற்றுத் தலைமையாக உருவெடுக்க வேண்டும் என்ற விருப்பங்களும்,அதற்கானஅழுத்தங்களும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் விக்கினேஸ்வரனோ மாற்று அணி ஒன்றுக்குதலைமை கொடுக்கதயாராக இல்லை.அது அவ்வளவு இலகுவான காரியமும் இல்லை என்பதை அறியாதவரும் இல்லை.ஆகையால் பிடி கொடுக்காமல் நழுவிக்கொள்ளவே அவர் முயற்சிக்கின்றார்.

இந்த நிலையில் விக்கினேஸ்வரன் பின்வாங்கினால் மாற்றுத் தலைமை ஒன்றுக்காக முயற்சி செய்தவர்கள் தமது அரசியல் நோக்கத்தை முன்கொண்டு செல்வதற்கு தமக்கிடையே ஒரு தலைமையை தெரிவு செய்ய வேண்டும். அல்லது மாற்றுத் தலைமை என்பதை ஒரு கூட்டுத் தலைமையாக உருவாக்க வேண்டும்.

கூட்டுத் தலைமை ஒன்றை உருவாக்குவதற்கு விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மைகள், கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகப் பண்புகள் என்பவைஅவசியமாகும்.

அதாவது இன்று சம்மந்தனிடம் காணும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு கதாநாயகனே மாற்றுத் தலைமையாக உருவாக வேண்டும். துரதிஷ்ட்டவசமாக தமிழ் மக்களிடையே அவ்வாறான ஒருதலைமை இல்லை. என வேமாற்றுத் தலைமைக்கான தேடல் இறுதியில் ‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சங்கரையாம்’ என்பதைப் போல் இலுப்பம் பூக்களே தமிழர்களுக்கு சக்கரையாக இருக்கப் போகின்றார்கள்.

-ஈழத்துக் கதிரவன்-

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg