Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாந்தை மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளில் பக்கச்சார்பு!

In இலங்கை
Published: 07:52 GMT, Jul 29, 2017 |
0 Comments
1429
icon_com
This post was written by : Varothayan

மன்னார் நீதிமன்ற நீதிபதியாக ஏற்கனவே கடமையாற்றிய நீதிபதியும், தற்போதைய மன்னார் நீதிமன்றத்தின் நீதிபதியும் மன்னார் – மாந்தை மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளில் முரண்பாடாகச் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலினை மன்று எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் குடும்ப உறவுகள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் – மாந்தை மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சட்டத்தரணி அவர்களின் சமர்ப்பனங்களையும், பாதிக்கப்பட்ட மக்களின் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் அடிப்படையிலும் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் மாந்தை மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்படி இருந்த போது, விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரினால் (சி.ஐ.டி) நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே இருந்த மன்னார் நீதிமன்றத்தின் நீதிபதியும், தற்போதுள்ள நீதிபதி அவர்களும் குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் முரண்பாடாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும், அரச சட்டத்தரணிக்கும், விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீதும் கடுமையாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை வேறோரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் மறைமுகமான முறைப்பாட்டில் நீதிபதியையும் மாற்றுமாறு கோரியிருப்பதாக தெரிகின்றது.

இதன் அடிப்படையில் வெளிநாட்டு நிபுணர்களைக்கொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்வது, மனிதப் புதைகுழியில் இருக்கின்ற மிகுதி மனித எச்சங்களை மீட்டு ஆய்வு செய்கின்றமை தொடர்பாக வெளிநாட்டு நிபுணர் குழுவினரை அழைத்து ஆய்வு செய்கின்றமை தொடர்பான கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட இருந்தது.

இந்நேரத்தில் இவ்வாறான ஒரு முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் நேற்று மன்னார் நீதிமன்றம் அதற்கான கட்டளையினை ஆக்காது நீதிச்சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பின்பு அதற்கான கட்டளையை ஆக்குவதாக கூறி இவ்வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது – என்றார்.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது மன்னார் சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.எம்.சபூர்தீன், ஜெபநேசன் லோகு மற்றும் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் மன்றில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg