Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றவாளிகளை தேடிய நல்லாட்சி: தமக்குள் குற்றவாளிகளுடன் போராடுகின்றது!

In சிறப்புக் கட்டுரைகள்
Updated: 13:50 GMT, Aug 22, 2017 | Published: 13:46 GMT, Aug 22, 2017 |
0 Comments
1515
icon_com
This post was written by : Vithushagan
5665-third-budget-good-governance-government1162965407

மஹிந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தையும், பாரிய மோசடிகளையும் தடுத்து நிறுத்தி இலங்கை நாட்டை அரசியல் அதிகாரச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றமொன்று அவசியமாக இருந்தது.

அந்த ஆட்சி மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய விட்டுக்கொடுப்புக்குத் தயாராகி பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவதற்கு இணங்கியதாலயே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நிறுத்தி ஆட்சி மாற்றத்திற்கு வித்திடப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது.

பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று அமைவதற்கான ஆணையை இலங்கை மக்கள் வழங்கியிருந்தார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரச் சுரண்டலிலிருந்தும், மோசடித் தனத்திலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பார்கள் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுத்து முன்மாதிரியாகச் செயற்படுவார்கள் என்றும், அபிவிருத்தியை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமாகும். அபிவிருத்தி அந்த இடத்திலேயே சுருண்டுவிட்டது.

மஹிந்தவின் பத்துவருட ஆட்சியில் நடைபெற்ற மோசடிகள் அளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டுவருட ஆட்சியில் மோசடிகள் நடைபெற்றிருப்பதாக சாதாரண பாமரனும் ஏங்கிப்போகும் அளவுக்கு மோசடிகள் நடந்தேறியுள்ளதாக கருத்துருவாக்கிகள் கூறுகின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவின் பொறுப்புக்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பிணைமுறி மோசடிகள் அதனைத் தொடர்ந்த விசாரணைகளைத் தொடர்ந்து எழுந்த அழுத்தங்களைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி அமைச்சராகவும், நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க வெளிநாட்டு அமைச்சராகவும் பதவி மாற்றம் செய்யப்பட்டார்கள்.

ஆனாலும் மத்திய வங்கி பிணை முறி விவகாரம் பூதாகரமாக எழுந்ததைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் இல்லாவிட்டால், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையை கொண்டு வருவோம் என்ற அழுத்தங்கள் முன் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதில் ரவி கருணாநாயக்கவை காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்பதையும், அவ்வாறான ஒரு நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அது ஆபத்தாக அமைந்துவிடும் என்ற காரணத்தினாலும், ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகளைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

இப்போது நீதி அமைச்சராக இருந்த விஜயதாஸவையும், பதவியில் இருந்து விலத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இரவிரவாக நடத்திக்கொண்டு இருக்கின்றது. அடுத்ததாக அமைச்சர் ரிஷாட் மீதும் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பாரிய மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரவில் அமைச்சர் ரிஷட் வாக்குறுமூலங்களை வழங்கியுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்தன.

மறுபக்கத்தில் சைட்டம் எனும் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்திருக்கும் அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் கடுமையான அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றார்கள்.

இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் தமது தலையை மறைத்தக்கொண்டு பதுங்கியிருக்கும் பல பெருச்சாளிகளின் சுய ரூபங்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. ஆகவே நல்லாட்சி அரசில் உள்ள கறுப்பு ஆடுகளை களையெடுக்கும் தீவிர நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

இனிவரும் பொழுதுகளில் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமும், சகாக்களும் கடுமையான நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஏற்படவுள்ளது அதேவேளை நல்லாட்சி அரசுக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளும் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.

ஜனாதிபதியின் களையெடுப்புக்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியையே குறிவைப்பதாக அமையும் என்ற அச்சம் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானவர்கள் தம்மை பலமடையச் செய்வதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கும் திரை மறைவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கைகள் ஓங்கி ஆட்சி அமையப்பெறுமானால், ஜனாதிபதி அமைச்சரவையை கட்டுப்படுத்த முடியாமல், ஐக்கிய தேசியக் கட்சியின் அசைவுக்கு செயற்படும் நிலைமை ஏற்படலாம் என்பதால், அமையவுள்ள ஆட்சியானது தனது ஆளுமைக்குள் கட்டுப்படுகின்ற ஆட்சியாக அமைய வேண்டும் என்ற முயற்சிகளை ஜனாதிபதியின் தரப்புகள் முன்னெடுத்துவருகின்றன.

அதற்காக தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அர்த்தமற்றவகையில் தொடர முடியாது என்றும் கூறுகின்ற சிலரை விலத்திவிட்டு, எஞ்சுகின்றவர்களை, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சி ஒன்றை அமைப்பது.

அல்லது சுதந்திரக் கட்சி மற்றும் தற்போது பொது எதிரணியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியில் வரக்கூடியவர்களை இணைத்துக்கொண்டு புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகளும் திரை மறைவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இவ்வாறு புதிய ஆட்சி ஒன்றை அமைப்பதில் இரண்டு பிரதான தரப்புகளும் ரகசியமான முயற்சிகளை மேற்கொள்கின்றபோதும், வெளிப்படையாக தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை பாதிப்பில்லாமல் தாம் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கே விரும்பவதாகவும், யார்? நல்லாட்சி அரசாங்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றாலும் நல்லாட்சி அரசாங்கம் 2020ஆண்டுவரை பிரச்சினையில்லாமல் தொடரும் என்றும் கூறுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் வெற்றியளிக்காமல் இருவரில் ஒரு பிரதான தரப்பின் கீழ் ஆட்சி ஒன்று அமையுமாக இருந்தால், அது பெரும்பான்மை பலமான ஆட்சியாக அமைய வாய்ப்பு இல்லை. அறுதிப் பெரும்பான்மையுடனேயே ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு அறுதிப் பெரும்பான்மையோடு அமையும் ஆட்சியானது பெயருக்கான ஒரு அரசாங்கமாக இருக்க முடியுமே தவிர, சட்ட திருத்தங்களை ஆக்கக்கூடிய வல்லமையையோ, பாரிய திட்டங்களையோ துணிச்சலாக செயற்படுத்த முடியாது.

அவ்வாறான ஆட்சியாளர்களால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. அது தாமும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றும் நிலைமையாகவே இருக்கும். தற்போதைய இடியப்பச் சிக்கலான நிலையில் நல்லாட்சியை உடைத்து ஆட்சியை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட முன்வர மாட்டார்.

இந்தச் சூழலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பிடிக்க அவசரப்பட மாட்டார். ஏன் என்றால் நல்லாட்சி தொடர்ந்தால் பிரதமரும், ஜனாதிபதியும் தமது இயலாமையை மூடிமறைக்க முடியாத நிலைமையை அடைந்துவிடுவார்கள் என்பதும், பொருளாதார வீழ்ச்சியானது நாட்டை ஒரு வறுமைச் சூறாவளிக்குள் தள்ளிவிடும்.

அப்போது ஒரு மீட்பரை நாட்டு மக்கள் எதிர்பார்ப்பர்கள் அவ்வாறானதொரு நிலையில் தாம் முன்னிலையில் வரும்போது தமக்கான வரவேற்பு பிரகாசமாக இருக்கும் என்று மகிந்தவும், அவரது சகாக்களும் காத்திருக்கவே விரும்புகின்றார்கள்.

ஈழத்துக் கதிரவன்

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg