Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க போட்டியிடும் அரசியல் தலைமைகள்

In சிறப்புக் கட்டுரைகள்
Updated: 04:23 GMT, Sep 5, 2017 | Published: 04:22 GMT, Sep 5, 2017 |
0 Comments
1604
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sarath maithri

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறை ஊடாக விசாரணை செய்து அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பரிகாரத்தையும் பெற்றுக்கொடுப்பதாக இலங்கை நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் வழங்கிய வாக்குறுதி நாம் ஏற்கனவே கூறிவந்ததைப்போல் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது வருடாந்த மாநாட்டில் கருத்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால, ஜகத் ஜெயசூரிய உட்பட எந்தவொரு இராணுவத் தளபதி மீதும் சர்வதேச சமூகம் கைவைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பது தென் இலங்கை அரசியல் சூழலின் எதிரொலிப்பாக அமைந்திருந்தாலும், போர்க்குற்றங்களாலும், மனித உரிமை மீறல்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஆட்சியாளர்களையும், யுத்தகாலத்தில் இராணுவத்திற்கு தலைமை தாங்கியவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அத்தகைய விசாரணையை தாம் முன்னெடுத்து குற்றவாளிகளாகக் காணப்படுகின்றவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதாக நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்கியதற்கு பிரதான காரணமாக இருப்பது, இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்று குறிப்பிடும்போது, அதற்கு பதிலளிக்க வேண்டியவர்கள், அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் என்பதால், அவர்களை குற்றவாளிகளாக காட்டி சிறையில் அடைத்துவிட்டால், சர்வதேச சமூகத்தின் முன்னால் தாம் நீதியை நிலை நாட்டியதாக அமைவதுடன், தமக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய இரண்டு பிரதான தரப்புகளையும் நிரந்தரமாக முடக்கியதாகவும் அமையும் என்றே நல்லாட்சியினர் திட்டமிட்டனர்.

இதற்கான முயற்சிகளை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவந்த போதும், இவர்கள் எண்ணியதைப்போல், மஹிந்தவையும், கோட்டாவையும் விசாரணையின் முன் நிறுத்தி, போர்க்குற்றவாளிகளாகக் காட்டுவதும், அவர்களை சிறையில் அடைப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல.

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமலும், புதிய வாக்குறுதிகளை வழங்க முடியாமலும் திணறிப்போய் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவை பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணைகளுக்காக அழைப்பதையும், அவரது மனைவி, பிள்ளைகளை விசாரணைகளுக்காக அழைப்பதையும் தவிர கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு முடியாத நிலையிலும், மஹிந்தவை சிறையில் அடைத்தால் பெரும்பான்மை சிங்கள மக்கள் எவ்விதமான உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்றும் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றது.

மஹிந்த மீது அவர் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்ட 6 மாதத்திற்குள் விசாரணைகளை நடத்தி, குற்றவாளியாகக் கண்டு, சிறையில் அடைத்திருந்தால், அதுபற்றி மக்கள் சிந்தித்து முடிவு செய்வதற்கு கால அவகாசம் இருந்திருக்காது.

ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் கையாளாகாத் தனத்தின் மீது பெரும்பான்மை சிங்கள மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு பக்கபலமாக இருந்தவர்களே ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகின்ற அளவுக்கு நல்லாட்சி அரசின் போக்கு மாறிவிட்டது.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு உணரப்படுவதுடன், நாளுக்கு நாள் அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது. ஆகவே தற்போது மஹிந்த மீது அரசாங்கம் கைவைக்குமாக இருந்தால் அது நல்லாட்சிக்கு ஆபத்தாக அமையும்.

மறுபக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மீதும் அரசாங்கம் அவசரப்பட்டு கை வைக்க முடியாது. படைத்தரப்பில் முன்னாள் ஜனாதிபதிக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் விசுவாசமானவர்களை பதவி மாற்றங்கள் செய்தும், நல்லாட்சிக்கு நெருக்கமானவர்களை தலைமைப் பொறுப்புக்களில் நியமித்தும், படைகளின் நடவடிக்கையை சாதகமாக வைத்துக்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆனாலும் படைத்தரப்பின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்தவர்களாகவும், அதற்கான பரிகாரத்தை வழங்கக்கூடியவர்களாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், கோட்டாபய இருக்கின்றார்கள். போர்க்குற்றத்திற்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் அவர்கள் தண்டிக்கப்பட்டால், அடுத்த கட்டமாக நேரடியாக படைத்தரப்பும் விசாரணைகளை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்படும் என்ற எச்சரிக்கை உணர்வு படைத்தரப்பிடம் இருக்கவே செய்கின்றது.

ஆகையால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் மஹிந்தவும், அவரது சகோதரரான கோட்டாபய இல்லாது போனாலும், தமது சுய நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு படைத்தரப்பினருக்கு இருக்கின்றது. எனவே படையினரை அரசியல் தலைமைகளும், அரசியல் தலைமைகளை படையினரும் சார்ந்து நின்றே இந்த போர்க்குற்ற விசாரணையையும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் இலங்கை எதிர்கொள்ள வேண்டும்.

அண்மையில் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படப்போவதாக வெளியான செய்தி குறித்து இலங்கை அரசாங்கம் ஆடிப்போய் உள்ளது.

அந்தச் செய்தியை மறுத்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாவிட்டால், ‘இந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளினதும், புலிப்பயங்கரவாதிகளின் நிறுவனங்களினதும் அபிலாஷைகளுக்கு ஏற்ப யுத்தத்தை வெற்றிகொண்ட எமது படை வீரர்களை போர்க்குற்றவாளியாக நிறுத்தி தண்டிக்கப் போகின்றது என்றும், எமது படையினரை காட்டிக்கொடுக்கப் போகின்றது என்றும்’ மஹிந்த ராஜபக்ஷ ஒரு பிரசாரத்தை தொடங்கிவிடுவார் என்ற அத்தகைய பிரசாரமானது, சிங்கள மக்களையும், குழப்பத்தில் தள்ளவிட்டு, படையினரையும் ஆத்திரமடையச் செய்துவிடும் என்று நல்லாட்சி அரசாங்கம் அஞ்சியது.

ஆகவேதான் ஜனாதிபதி மேற் கூறிப்பிட்டவாறான ஒரு உறுதி மொழியையும் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இதற்கிடையே பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தென் இலங்கை அரசியல் வட்டாரத்தில் காட்டுத் தீ போல் எரியத் தொடங்கியுள்ளது. அதாவது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கும் பகை என்பது உலகமறிந்த உண்மை. அதன் உச்சகட்டமாக பல காரணங்கள் கூறப்பட்டு பொன்சேகா முன்னைய ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட போதும், தனது எதிராளிகளை பழிவாங்குவதற்கு தருணம் வாய்க்காதா என்று காத்துக்கொண்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு தற்போதைய போர்க்குற்றம் தொடர்பான விவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, கோட்டாவுக்கு எதிரான சில தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், நியாயமான போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுமாக இருந்தால், அதில் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

சரத் பொன்சேகாவின் அந்தக் கருத்து கோட்டாபயவை மட்டுமல்லாது, இலங்கை படையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சரத் பொன்சேகாவின் கருத்துத் தொடர்பாக இராணுவத் தளபதி மகேஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சரத் பொன்சேகாவுக்கும், கோட்டாபயவுக்கும் இருக்கும் தனிப்பட்ட விரோதங்களை அதற்குரியவாறு தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், உங்கள் விரோதங்களை தீர்த்துக்கொள்வதற்காக படையினரை பழிகொடுக்க முற்படாதீர்கள் என்றும் கடுந்தொனியில் கூறியிருக்கின்றார்.

சரத்பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக கூட்டு எதிர்க்கட்சி போராட்டங்களை நடத்தும் அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியினரின் தலைவர்களில் ஒருவரான விமல் வீரவன்ச இவ்விடயம் தொடர்பில் கருத்துக் கூறும்போது, பீல்ட் மார்ஷல் பொன்சேகா போர்க்குற்ற விசாரணை விடயத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவைக் காட்டிக்கொடுக்கவே முயற்சிக்கின்றார் என்று கூறியிருக்கின்றார்கள்.

தென் இலங்கையின் இவ்வாறான படபடப்புக்களையும், அறிக்கைகளையும் அவதானிக்கும்போது, இலங்கையில் போர்க் குற்றம் நடந்தேறியுள்ளது என்பதையும், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்பதையும் இவற்றால் தமிழ் இனம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்வது இலகுவாகின்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும், படையினரையும் காட்டிக்கொடுக்காதீர்கள் என்றும், தாம் காட்டிக்கொடுக்கப்போவதில்லை என்றும் இவர்கள் கூறுகின்றார்கள் என்றால் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். அவர்களைப் பாதுகாக்கவே முயற்சிக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg