Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

In இந்தியா
Updated: 11:52 GMT, Sep 5, 2017 | Published: 11:52 GMT, Sep 5, 2017 |
0 Comments
1282
This post was written by : Elakkiya

கச்சதீவு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நேற்று (திங்கட்கிழமை) மாலை மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 900 ற்கும் அதிகமான மீனவர்கள் மீது இன்று அதிகாலை இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மீனவர்களின் மீன்களையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்திய கடற்படையினர் கற்கள் மற்றும் கட்டைகளால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் படகு ஒன்றிற்கு தலா 30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி கடந்த சில மாதங்களாக குறைவான படகுகளே மீன்பிடிக்கச் செல்கின்ற நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த தாக்குதலால் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நஷ்டம் அடைந்து கரை திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க தமது வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்ற நிலையில் நல்லதொரு தீர்வை ஏற்படுத்தி தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg