Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் பேரவை தற்துணிவோடு முன்னோக்கிப் பாயுமா?

In இன்றைய பார்வை
Updated: 11:50 GMT, Sep 8, 2017 | Published: 11:50 GMT, Sep 8, 2017 |
0 Comments
1549
This post was written by : Surenth

தமிழ் மக்கள் பேரவையால்  ஏற்பாடு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என்ற முணுமுணுப்புக்களை கேட்க முடிந்தது.

‘ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பிட்டு யாழப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பேரவையின் கூட்டத்தில், பேரவையின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தபோதும், கூட்டத்தின் இடை நடுவே பேரவையின் தலைமைகளில் ஒருவரான கஜேந்திரன் பொன்னம்பலம் எழுந்து வெளியேறிச் சென்றிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றியவர்களில் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் உரைகள் கூட்டத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில், பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதும், புதிய அரசியல் அமைப்பானது ‘ஏக்கிய ராஜிய’ என்ற சிங்களச் சொல்லைக் கூறி தமிழ் மக்களுக்கு சமஷ்டிக்கு ஒப்பான தீர்வு கிடைக்கப்போவதாக கூறப்படுவதை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அரசாங்கத்துடன் சமஷ்டித் தீர்வு தொடர்பாகவும், வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாகவும் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டே கூட்டமைப்பின் தலைமை, புதிய அரசியலமைப்பு வரைபு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

அதைவிடுத்து புதிய அரசியல் வரைபுக் குழுவில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம் அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை வழங்காவிட்டால், நாங்கள் தமிழ் மக்களிடம் சென்று முறையிடுவோம் என்று கூறுவது ஏற்கத் தக்கதல்ல. என்று கூட்டமைப்பின் தலைமை மீது குற்றச்சாட்டை முன்வைத்தபோது மண்டபத்தில் இருந்தவர்கள் தமது ஆமோதிப்பை வெளிப்படுத்தினர்.

அதுபோல் பேராசிரியர் சிற்றம்பலம் தனது உரையில், தமிழ் மக்கள் தமக்கான தீர்வுக்காக நீண்ட நெடிய போராட்டத்தையும், அதற்கான விலையையும் கொடுத்துவிட்டார்கள். ஆகவே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வானது மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வாகவே இருக்க முடியும் என்றும் கூறியபோதும், மண்டபத்தில் அமர்ந்திருந்தோர் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தனது உரையில் 65 ஆண்டுகளாக தமிழர்கள் கூறிவரும் சமஷ்டியை பெறுவதற்கு அயராது போராட வேண்டும் என்பதை வழியுறுத்திய போது மண்டபத்தில் இருந்தவர்கள் சோர்ந்து போனார்கள். விக்னேஸ்வரன் புதுமையாகவும், எழுச்சியாகவும் கோரிக்கைகளை முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்பு புஷ்வானமானது, அத்தோடு நின்றுவிடாமல், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறியதற்காக தென் இலங்கையில் பொன்சேகாவின் கொடும்பாவியை தெற்கில் சிங்களவர்கள் எரிக்கின்றார்கள்.

வடக்கில் தமிழர்களாகிய நாம் பொன்சேகாவின் உருவத்திற்கு பூமாலை அணிவித்து பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறியதையும், மண்டபத்தில் இருந்த பார்வையாளர்கள் வரவேற்கவில்லை. ஏற்கனவே பொன்சேகாவை ஆதரித்து அன்னச் சின்னத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக் கூறிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் மீது தமிழ் மக்கள் எரிச்சலடைந்துள்ள நிலையில், வடக்கில் தமிழர்கள் பொன்சேகாவுக்கு பூமாலை சூட்டவேண்டும் என்று விக்னேஸ்வரன் கூறியதையும் முகச் சுழிப்போடு நோக்கினர்.

வடக்கிலும், கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ பேரணிகளை பெரும் எடுப்போடு நடத்திய பலரின் கவனத்தை ஈர்த்த தமிழ் மக்கள் பேரவையின் பொதுமக்கள் கவர்ச்சி மங்கிப் போய்விட்டதாகவே வீரசிங்கம் மண்டபத்தில் கூடிய மக்களின் எண்ணிக்கை வெளிப்படுத்தியது.

‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை நடத்தியதன் பின்னர் தமிழ் மக்கள் பேரவை தமக்கிடையேயான சந்திப்புக்களையோ, மக்கள் சந்திப்புக்களையோ நடத்தாமல் உறங்கு நிலைக்கே சென்றுவிட்டிருந்தது. தமிழ் மக்கள் பேரவை இடைப்பட்ட காலத்தில் செய்த அரசியல் முன்னெடுப்புக்கள் எவை? என்ற கேள்வி எழுந்தபோது, ‘ நாங்கள் ஒதுங்கியோ, உறங்கிக்கொண்டோ இருக்கவில்லை. அறிக்கைகள் விட்டிருக்கின்றோம், சர்வதேசத்தின் கவனத்திற்கு பிரச்சினைகளைக் கொண்டு போய் இருக்கின்றோம்’ என்று பதிலளிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் அந்த பதில் கேட்டு, அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்கள் பலரும், முகம் சுழித்தனர் ஏன் என்றால்? உங்கள் அறிக்கைகள் எவையும் இதுவரை எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்கவில்லை. ஊடகங்களுக்கும் தெரியாமல், தமிழ் மக்களுக்கும் தெரியாமல், இரகசிய வழியில் நேரடியாக சர்வதேச சமூகத்திற்கு அனுப்பி வைக்கின்றீர்களா? என்றும், உண்மையில் நீங்கள் சர்வதேச சமூகத்திற்கு அவ்வாறு அறிக்கைகள் அனுப்பியிருந்தால், அந்த அறிக்கைகளின் பிரதிகளை இப்போதாவது பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டபோது அதற்கான பதிலை மேடையில் இருந்த எவரும் வழங்குவதற்கு முன்வரவில்லை.

சுமார் 1200 பேர் உள்ளடங்கக்கூடிய வீரசிங்கம் மண்டபத்தில் 300 வரையானவர்களே பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். தமிழ் மக்கள் பேரவையின் அழைப்புக்கு எழுக தமிழுக்கு மக்கள் அணி திரண்டதைப்போல் அல்லது வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத பிரேரணை கொண்டுவரப்பட்டதை எதிர்த்து வீதியில் இறங்கியவர்களைப்போல் பெருங்கூட்டத்தை காணக்கிடைக்கவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் தலைமைப் பொறுப்பில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருந்தபோதும், வட மாகாணசபையில் அவருக்கு எதிரான பிரச்சினைகள் தலைதூக்கியபோது, அதில் தமிழ் மக்கள் பேரவை தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்திருந்தற்கு எவ்விதமான அரசியல் தந்திரோபாயம் பொதிந்திருந்தது என்பதை இன்றளவிலும் வடக்கு தமிழ் மக்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்கள் பேரவையின் அழைப்புக்கு மக்கள் செவிசாய்க்காமல் போனதால் தமிழ் மக்கள் இரண்டுவகையான தீர்மானத்திற்கு போய்விட்டார்கள் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, தமிழ் மக்கள் பேரவையை நம்பிப் பயணிப்பதால் அரசியல் ரீதியாகவோ, தீர்வு ரீதியாகவோ நன்மைகள் எவையும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கின்றார்கள். அல்லது தமிழ் மக்கள் பேரவையினரின் செயற்பாடுகளும், மேடைப்பேச்சுக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தனது கடிவாளத்தை அடகு வைத்த செயற்பாடுதான் என்ற புரிந்துணர்வு தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கலாம்.

அவ்வாறான நிலையில் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என்பதால் கூட்டமைப்பை நேரடியாக எதிர்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சிக்கின்றார்கள்.  அதற்காக தமிழ் மக்கள் பேரவையை முகவராக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற புரிதலுக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் மக்கள் பேரவையினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்ச்சிப்பதாகவும், புத்திமதி கூறுவதாகவும் சொல்வதன் ஊடாக எதைச் சாதிக்கப்போகின்றார்கள்? தாம் மக்கள் மத்தியில் முன்வைக்கும். கூட்டமைப்பு தொடர்பான விமர்சனங்களை, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் விவாதிக்கும் திராணி இல்லாதவர்கள் என்பதையும், சம்பந்தனின் முடிவுகளை மறுத்து புதிய பாதையில் பயணிக்கவோ, தமிழ்மக்களுக்கு வழிகாட்டவோ துணிச்சலற்றவர்களாகவே தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவே தெரிகின்றது.

தமிழ்மக்களின் இவ்விதமான புரிதலை மாற்றியமைத்து, தமிழ் மக்களின் பாதையில் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு பயணிக்க வேண்டுமாக இருந்தால், பேரவை தன்னோடு பிணைத்துக் கட்டியிருக்கும் இரும்பு உருண்டைகளை அவிழ்த்துவிட்டு, மாற்றுத் தலைமைக்கான தேடலுக்கு தீனி போடும் விதமாகவும், அரசியல் தீர்வுக்கான உறுதியான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்துகின்ற உயரப்பாய்ச்சலுடன் முன்னோக்கிப் பாய வேண்டும்.

-ஈழத்துக்கதிரவன்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg