Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல்போனோர் அலுவலகம் சர்வதேசத்தைச் சமாளிக்கவா? பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கா?

In இன்றைய பார்வை
Updated: 12:42 GMT, Sep 13, 2017 | Published: 12:42 GMT, Sep 13, 2017 |
0 Comments
1367
This post was written by : Vithushagan

ஐக்கிய நாடுகள் சபையின் குழு விவாதத் திருவிழா இந்தவாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்பமாகியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் 36 ஆவது கூட்டத்தொடரில் பல நாடுகளிலும் நடைபெற்றதும், நடைபெற்றுக்கொண்டு இருப்பதுமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வாசிக்கப்படும்.

இலங்கையைப் பற்றியும் காரசாரமான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 36ஆவது மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் அக்கறையோடு செயற்படவில்லை என்பதை கோடிட்டுக்காட்டியிருக்கின்றார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விவகாரங்களில் தமது பொறுப்புக் கூறலை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கமானது, ஏற்றுக்கொண்ட பொறிமுறைக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் இலங்கை தொடர்பான விவகாரத்தை சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டு கடினமான பாதையை நோக்கி செல்லப்படும் என்று எச்சரிக்கும் தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது உரையில் இலங்கை தொடர்பாக குறிப்பிட்டவற்றில், இலங்கையில் இடம்பெற்றதாக நம்பப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை ஆராய வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான பாதிக்கப்பட்டோரின் முறைப்பாடுகளை ஆராயவும், விசாரணைகளை முன்னெடுக்கவும் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் நீண்ட காலமாக நடைபெற்ற இன வன்முறைகள் காரணமாக நம்பிக்கை இழந்துள்ள மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 வருடங்களாகிவிட்டபோதும், இன்னமும் படையினர் வசமிருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விரைவாக அரசாங்கம் விடுவித்து உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வழங்குகள் பல வருடங்களாக விசாரணைகள் இன்றி கிடக்கின்றன அத்தகைய வழக்குகளை துரிதமாக விசாரனைக்கு எடுத்துக்கொள்ள விஷேட நடவடிக்கை அவசியமாகும். அத்துடன் தற்போது இலங்கைக்கு தேவையற்றதும், சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதிப்பதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்.

வடக்கில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் கோரிக்கைகளை அரசாங்கம் போராடுவதற்கான சுதந்திரம் வழங்கியிருப்பதாக கூறி கவனத்தில் எடுக்காமல் தொடர்ந்து இருப்பதால், அந்த மக்களிடையே அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அல் ஹூசைன், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை தாமதப்படுத்துவதால், பாதிக்கப்பட்ட மக்கள் மன விரக்தியடைந்துள்ளனர். என்பதையும் தனது உரையில் கோடிட்டுக்காட்டியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எவ்வாறான தந்திரோபாயத்துடன் கையாள்கின்றது என்பதை பல தடவைகளில் இதே பத்தியில் ஆராய்ந்திருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை பிரதானமான கடமையாக ஏற்று செயற்படுத்த விரும்பவில்லை. அப்படி விரும்பினாலும், தென் இலங்கை அரசியல் சூழல் அரசுக்கு சாதகமாக இருக்காது.

இனவாதிகளையும், மதவாதிகளையும், அரசியல் எதிராளிகளையும், படையினரையும் எதிர்கொள்ளும் மனவலிமை நல்லாட்சி அரசுக்கு கிடையாது. இலங்கையில் ஆட்சி பீடம் ஏறும் எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் இதேநிலைமைதான்.

இதற்கிடையே நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் நிதிப் பிரச்சினையை எதிர்கொள்வதற்காகவும், சர்வதேச சமூகத்தின் சதிகாரர்கள் தமக்கு எதிராக எதையும் ஆரம்பித்துவிடாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும், போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருப்பதாக காட்டிக்கொள்வதற்கு சில முயற்சிகளை இலங்கை அரசுகள் எடுக்கும்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் சமாளிக்கும் தந்திரோபாயத்தையே கடைப்பிடிக்கும். அறிக்கைகளாகவும், வாக்குறுதிகளாகவும் மேன்மையான செயற்பாடுகள் பற்றி கூறினாலும், நடைமுறையில் அதற்கான துரிதமான செயற்பாடுகளை நல்லாட்சியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைனின் காட்டமான இலங்கை குறித்த அறிக்கையைத் தொடர்ந்து இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான ஆவனத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.

இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கிகரிக்கப்பட்ட நிலையில், சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இலங்கை அரசுகளின் மனோபாவத்தை வெளிக்காட்டும் சிறந்த உதாரணமாகவே இதைப்பார்க்கலாம். செய்ய வேண்டிய கட்டாயம் எழுகின்றபோது சில முயற்சிகளை செய்வதும், ஆஹா ஏதோ செய்கின்றார்களே என்று அழுத்த சக்திகள் ஓய்வெடுக்க ஆரம்பிக்கும்போது, அந்த முயற்சியை கைவிட்டு, அது தொடர்பான அழுத்தம் மீண்டும் வரும்வரை விட்டுவிடுவார்கள்.

அன்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் தமிழ்மக்களின் மனங்களை பெரிதும் பாதித்திருந்தது. அவர்களைப் பற்றி முறைப்பாடுகளைச் செய்யுங்கள் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஜனாதிபதி கூறியதானது, சாதாரணமாக ஊருக்குள் நடந்த சிறிய தகராறு தொடர்பாக பொலிஸ் முறைப்பாட்டுக்குச் சென்று முறைப்பாடு செய்வது போன்ற தோரணையைக் கொண்டிருந்ததாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

அன்மைக்காலமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்ன? பிரச்சினை இருக்கின்றது என்று இனவாத சிங்களத் தரப்புகள் கேட்டதைப்போலவே உங்கள் உறவுகள் காணாமல் போனது தொடர்பாக முறைப்பாடுகளை செய்யுங்கள் என்று ஜனாதிபதி கூறியதும் இருக்கின்றது.

இதே ஜனாதிபதிதான் பதவிக்கு வந்த ஆரம்பகாலத்தில் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் அரசியல் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இப்போது காலம் கடந்துவிட்டது, ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைவிடவும், சர்வதேசத்தின் பிரச்சினைகளை விடவும், தனது அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்வதும், தற்போதைய ஆட்சியை குறைந்தபட்சம் அதன் இறுதிக்காலம் வரையாவது கொண்டு நடத்துவதற்கான சவால்களை எதிர்கொள்வதுமே பிரதான பிரச்சினையாக மாறியிருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கும், உள்ளக அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் சில காரியங்களை செய்வதற்கு முற்படலாம் அல்லது முயற்சி செய்வதுபோல் காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் யுத்த காலத்தில் படையினருக்கு தளபதிகளாக இருந்து செயற்பட்டோர் உடபட அவர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்தவர்கள் மீது கை வைக்க எவரையும் அனுமதிக்கப்போவதில்லை ஜனாதிபதி கூறிய அந்தக் கருத்தானது, இலங்கை மீதான சர்வதேசத்தின் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும். அந்த அதிருப்தியின் எதிரொலிப்பு தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் 36ஆவது மாநாட்டிலும் எதிரொலிக்கவே செய்யும்.

-ஈழத்துக் கதிரவன்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg