Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி அபகரிப்பும் மேற்குலநாடுகளின் தகவல் சேகரிப்பும்

In இன்றைய பார்வை
Updated: 13:15 GMT, Mar 1, 2014 | Published: 13:15 GMT, Mar 1, 2014 |
0 Comments
1439
This post was written by : adminsrilanka

வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் புதிய இராணுவ முகாம்கள் சீனாவின் நலன்களுக்கானது என்ற தகவலை அறிவதற்காகவா அல்லது உண்மையாகவே பாதிக்கப்பட்ட சமூகத்தின் பாராம்பரிய பிரதேசங்களை பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விபரங்கள் பெறப்படுகின்றனவா?

அ.நிக்ஸன்

வட மாகாணத்தில் காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் சில தூதரகங்கள் தகவல்களை பெறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயர்கள் மற்றும் பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து விபரங்களை அவர்கள் பெறுவதாக அறிய முடிகின்றது. சில தூதரகங்களின் இராஜதந்திரிகள் வட மாகாணத்திற்கு சென்று இந்த விபரங்களை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் காணி அபகரிப்பு பற்றிய விடயங்கள் பெறப்படுகின்றமைக்கும் ஜெனீவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கும் தொடர்பு இருப்பதாக கூற முடியாது. ஏனெனில் இந்த நடவடிக்கைகள் கடந்த வாரம்தான் ஆரம்பிக்கப்பட்டன.

பொது அமைப்புகள் 

மன்னாருக்கு சென்ற குறித்த இராஜதந்திரிகள் காணி அபகரிக்கப்பட்டு இராணுவத் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்ற விபரங்களை மாத்திரமே பெற்றதாகவும் அபகரிக்கப்பட்ட வேறு காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை வைக்கப்படுதல் போன்ற விடயங்களை அறிந்து கொள்ள விரும்பவில்லை என்றும் அங்குள்ள பொது அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் கூறினார். ஆக இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் புதிய முகாம்கள் அமைக்கப்படுகின்றமை குறித்த விடயங்களில் மாத்திரமே அக்கறை செலுத்தப்படுகின்றது. போர் முடிவடைந்த பின்னர் அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரங்கள் போருக்கு முன்னர் பெறப்பட்ட காணிகளின் விபரங்கள் மிகவும் துல்லியமாக பெறப்பட்டதாகவும் எத்தனை மாவட்டங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டது என்ற தகவல்களும் இராஜதந்திரிகளினால் பெறப்பட்டிருக்கின்றது.

காணி அபகரிப்பும் ஒரு இன அழிப்புத்தான் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் தன்னை சந்தித்த இராஜதந்திரி ஒருவருக்கு கூறியுள்ளார்.. ஒரு இனம் மற்றுமொரு இனத்தால் கொல்லப்படுவது அந்த இனத்தின் கலாசாரங்கள் சிதைக்கப்படுவது மாத்திரம் இன அழிப்பு என்று வரையறை செய்ய முடியாது. அந்த இனத்தின் பாராம்பரிய காணிகள் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் வழிபாட்டு தலங்கள் அமைக்கப்படுவதும் இன அழிப்புத்தான். ஆனால் வடக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதால் அதனை இன அழிப்பு என கூற முடியாது என்று இந்தியாவை சேர்ந்த  தெற்காசிய விமர்சகர் குழு (Southasiaanalysis.org) அங்கத்தவர் ஒருவர்; கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு இல்லாத அக்கறை

அதேவேளை மேற்குலக நாடுகளின் சில இராஜதந்திரிகள் வடபகுதியில் படையினரால் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக திடீரென காட்டும் அக்கறை தமிழ் மக்களுக்கானதா? அல்லது சீனாவின் அரசியல் இராணுவ நலன்கள் எவ்வாறு வடக்கு கிழக்கில் பிரயோகிக்கப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வதற்காகவா என்பது தொடர்பில் கேள்விகள் உண்டு. இறுதிக்கட்ட போரில் மாத்திரமல்ல அதற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தங்களின்போதும் அதாவது 30 வருட போரில் இடம்பெற்ற படுகொலைகள் பண்பாட்டு அழிவுகள் தொடர்பாக பேச விரும்பாத நிலையில் அல்லது அதனை புறக்கணிக்கும் நிலையில் தற்போது காணிகள் அபகரிப்பு தொடர்பான கவனம் பிரந்திய அரசியல் சார்ந்தது என்ற முடிவுக்கு இலகுவாக வரலாம். அனாலும் மேற்குலக நாடுகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அந்த ஆர்வத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தமிழ்த் தரப்புக்கும் இராஜதந்திரம் இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் முன்று விடயங்களை இங்கு நோக்கலாம். ஒன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க அரசாங்கம் மறுக்கின்றமை, இரண்டாவது குடியேற்றம் செய்வதற்காக சர்வதேச விதிகளுக்கு மாறாக வடக்கில் காடுகள் அழிக்கப்படுகின்றமை, முன்றாவது காணி அபகரிப்பு கிழக்கில் 1948இல் ஆரம்பிக்கப்பட்டமை போன்ற மூன்று விடயங்களையும் மேற்குலக நாடுகளுக்கு ஆதரங்களுடன் வழங்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தரப்பு இந்த மூன்று விடயங்களின் அடிப்படையில் காணிப் பறிப்பு தொடர்பாக ஆராயும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு தகவல்களை வழங்கும்போது சில கசப்பான உண்மைகளை அவர்கள் புரிந்துகொள்ளும் நிலை உருவாகலாம்.

சொந்த தேவைகளின் அவசியம்  

எந்தவொரு வல்லரசு நாடும் தமது அரசியல், பொருளாதார இராணுவ நலன்கள் சார்ந்து செயற்படுகின்றமை வழமையானதுதான். அதில் குறைகாண முடியாது. ஏனெனில் அதுதூன் உலக வழமையாகிவிட்டது. ஆகவே தமிழ்த்தரப்பு அந்த நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஊடாக வரக்கூடிய லாபங்களை முதலில் கணக்கு பார்க்க வேண்டும். ஜெனீவா கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் காணி அபகரிப்பு விடயத்தில் மேற்குலக நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளன என்பதற்கான ஒரு அடையாளமே மேற்படி நகர்வாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் சந்தித்த கொழும்பில் உள்ள இராஜதந்திரி ஒருவர் காணி அபகரிப்பு தொடர்பாக தனது நாட்டுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல தனது மனச்சாட்சிக்கு ஏற்ப தமிழ்மக்கள் காணி அபகரிப்பினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தனது அறிக்கையில் குறிப்பிடுவேன் என்றும் அவர் உறுதியளித்திருக்கின்றார். ஆக தமது நலன் சார்ந்து செயற்பட்டாலும் மக்களின் பாதிப்பு அவர்களின் மனச்சாட்சியை உறுத்துகின்றது என்ற செய்தி இங்கு வெளிப்பட்டுள்ளது. எனவே மேற்குலக நாடுகளின் இலங்கை தொடர்பான நோக்கம் எதுவாக இருந்தாலும் காணி அபகரிப்பு பற்றி அவர்கள் சேகரிக்கும்; விபரங்களுக்கு உரிய முறைப்படி தகவல்களை வழங்கினால் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் தமிழ்த்தரப்புக்கு குறைந்த பட்சமேனும் சாதகமான விளைவுகளை அது ஏற்படுத்தும்.

இனப்பிரச்சனையின் அடிப்படை

காணி அபகரிப்பு, கல்வித் தரப்படுத்தல், வேலை வாய்ப்பில் சமவாய்ப்பின்மை போன்ற காரணங்கள்தான் இனப்பிரச்சினையின் அடிப்படை. ஆகவே 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியின் பின்னரான அரசியல் சூழலில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் குறைந்த பட்சம் சிறிய மாற்றங்களை கொண்டு வந்தது. தற்போது காணி அபகரிப்பு பற்றிய விடயமும் மேற்குலக நாடுகளினால் ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படவுள்ளது. சீனா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகள் இலங்கை மீது செலுத்தும் செல்வாக்கின் காரணமாக காணி அபகரிப்பு விடயத்தையும் பூதாகராமாக்கி இலங்கைக்கு மேலும் அழுத்தங்களை கொடுக்க மேற்குலக நாடுகள் முற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் எழுந்தாலும் வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்ட முறைகளை தமிழ்த்தரப்பு வெளிப்படுத்தினால் நீண்டகால அரசியல் கோரிக்கைகளுக்கான ஒரு நியாயப்படுத்தலாக அது அமையலாம்.

இஸ்ரேல் எவ்வாறு பலஸ்தீனர்களின் காணிகளை அபகரித்ததோ அதேபோன்ற ஒரு நடைமுறையில் இலங்கை அரசாங்கமும் 1948 ஆம் ஆண்டில் இருந்து காணிகளை அபகரித்து வருகின்றது என்ற ஒரு செய்தியை வெளிப்படுத்தலாம். சர்வதேசம் எதையும் செய்யாது என்பது உண்மை. ஆனால் போரின் அவலங்களை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நன்கு பயன்படுத்த வேண்டிய ஒரு இக்கட்டான அரசியல் சூழலில் தமிழர்கள் இருக்கின்றனர். ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் காணி அபகரிப்பு விடயம் சூடு பிடிக்கும் நிலை தென்படுகிறது. ஆனால் ஆதாரங்கள் வரலாறுகளுடன் தகவல்களை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தயாராக இருக்கின்றதா? பட்டறிவு அற்ற தயார்படுத்தல் வருகின்ற சந்தர்ப்பத்தையும் நாசமாக்கிவிடும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg