Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல்களைக் கண்டு நல்லாட்சி நடுங்குகின்றது!

In சிறப்புக் கட்டுரைகள்
Updated: 13:03 GMT, Oct 24, 2017 | Published: 12:43 GMT, Oct 24, 2017 |
0 Comments
1372
icon_com
This post was written by : Vithushagan
5665-third-budget-good-governance-government1162965407

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது ஒருபக்கமாக இருக்கையில், நல்லாட்சி மலர்ந்து மூன்று வருடத்திற்குள் மஹிந்த காலத்தில் நடந்ததைவிடவும் மோசமான மோசடியும், கொள்ளையும் நடைபெற்றுவிட்டதால் நல்லாட்சிக்கு வாக்களித்த மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள்.

இந் நிலையிலேயே தேர்தல் ஒன்றைச் சந்திக்க நல்லாட்சி அரசாங்கம் அச்சத்துடன் இருக்கின்றது. நாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகள் தனது ஆட்சிக்காலங்களை நிறைவு செய்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆணையாளர்களின் கீழ் முடங்கிக் கிடக்கின்றன.

அந்தத் தேர்தலை நடத்துமாறு பொதுமக்கள் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும், தேர்தல் ஆணையகமும் கூட தொடர்ந்து வலியுறுத்தல்களை விடுத்துவந்த போதும், அரசாங்கம் பல்வேறு கதைகளைக் கூறி தேர்தலை இழுத்தடிப்புச் செய்து வந்தது.

இறுதியாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்த சட்டமூலத்தை உருவாக்கி அதை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, புதிய சபைகள் உருவாக்கம், வட்டார எல்லைகள் உருவாக்கம், தொகுதிவாரி, விகிதாரசாரம் கலப்பு தேர்தல் முறைமை, பெண்களுக்கு இருபத்தி ஐந்துவீத கட்டாய பிரதிநிதித்துவம் போன்ற பலவேறு விடயதானங்களை உள்ளடக்கிய புதிய உள்ளுராட்சி மன்ற சட்டதிருத்தத்தை விவாதித்து நீண்ட காலத்தை இழுத்தடித்து இப்போது நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றிக் கொண்டது.

சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். தேர்தல் ஆணையாளரும் இவ்வருடம் தேர்தலை நடத்த தாம் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசாங்கமோ தேர்தலை வேறு எந்த வழியில் ஒத்திப்போடலாம் என்று ஆராய்ந்து ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தது. அதாவது நவம்பர் மாதம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது, டிசம்பர் மாதம் பாடசாலையில் பரீட்சைகள் நடைபெறவுள்ளது எனவே இவ்வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டாம் என்று அரசாங்கம் கூறியது.

எதுமே செய்யமுடியாமல் உள்ளுராட்சித் தேர்தல் ஒன்றுக்கு போவதாக இருந்தாலும், வரவு செலவுத் திட்டத்தை முன் வைத்து அதில் நடைமுறைப்படுத்த பொருளாதார நிலைமை கை கொடுக்கவிட்டாலும்; நாட்டு மக்களுக்கு சலுகைகளை அறிவித்துவிட்டு தேர்தல் ஒன்றுக்குச் சென்றால் கொஞ்சமாவது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கே அரசாங்கம் வரும் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை.

ஒருவாராக உள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்திலோ, அல்லது மூன்றாம் வாரத்திலோ ஒரு சனிக்கிழமையை தெரிவு செய்து தேர்தலை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 2018ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என்று தெரியவருகின்றது.

அதை எண்ணி நிம்மதி மூச்சுவிட்ட அரசாங்கத்தின் கழுத்தைச் சுற்றிய இன்னொரு பாம்பாக இருந்தது மாகாணசபைகள் திருத்தச் சட்டமான 20ஆவது திருத்தச் சட்டமாகும். இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் விவாதத்திற்குக் கொண்டுவந்ததே, இம்மாதம் 26ஆம் திகதி ஆட்சிக்காலம் நிறைவடையும் கிழக்கு, வடமத்திய, சப்றகமுவா மாகாணசபைகளின் தேர்தல்களை இவ்வாண்டு எதிர்கொள்வதில் தமக்கு பாதகமாக அமையும் என்று கருதிய அரசாங்கம் சட்டதிருத்தத்தைக் கொண்டுவந்து, மேலும் ஒருவருடத்திற்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை தள்ளிப்போடவே திட்டமிட்டது.

மாகாணசபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசாங்கம் எவ்வகையிலும் கைவைக்கக் கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டில் இருந்த மாகாணசபைகள் அரசின் சட்டதிருத்தத்தை எதிர்த்து தமது தீரமானத்தை நிறைவேற்றின.

புதிய சட்ட திருத்தத்தின் பிரகாரம் தற்போதைய தமது பதவிகள் மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால் கிழக்கு உற்பட்ட ஏனைய இரண்டு மாகாணசபைகளும் சட்ட திருத்தத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றின.

மாகாணசபைகளின் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல தரப்பும் வழக்குத் தாக்கலைச் செய்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு புதிய மாகாணசபைகள் திருத்தச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இவ்விடயம் தொடர்பான தீர்ப்பை மூடிய அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.

அந்த தீர்ப்பு 19ஆம் திகதி சபாநாயகரினால் சபையில் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், மாகாணசபைகள் தொடர்பான திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது தொடர்பான செய்திகள் யூகங்களாக வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், 20ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

தீர்ப்பு அவ்வாறுதான் அமைந்திருக்குமானால், 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கலாம். ஆனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் ஒரு போதும் போகாது என்பது தெளிவாகின்றது.

இந்நிலையில் 20ஆவது திருத்தச் சட்டத்தை கைவிட்டு, அந்த மூன்று மாகாணசபைகளுக்கும் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக வேண்டும். என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே தேர்தல் ஆணையாளரும் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால், ஆட்சிக்காலம் நிறைவடையும், மூன்று மாகாணசபைகளுக்கும் ஒக்டோபர் 2ஆம் திகதி வேட்புமனு கோரப்பட்டு டிசம்பர் 9ஆம் திகதி தேர்தல்கள் நடைபெறுவதற்குத் தேவையான அறிவிப்பை தன்னால் வெளிப்படுத்த முடியும் என்று கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் இவ்வருடம் தேர்தல் எதையும் நடத்த விரும்பாத அரசாங்கம் உள்ளுராட்சி சபைகள் தேர்தல் தொகுதி வாரி 60 வீதமும், விகிதாசாரம் 40 வீதமுமாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதைப்போலவே, மாகாணசபைக்கான தேர்தலையும், நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்திருக்கும் கருத்தானது, மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தும் முறைமையை அலசி ஆராய்ந்து தீர்மானிக்க மேலும் சில காலம் தேவையாக இருக்கின்றது என்ற காரணத்தை முன்வைத்து காலத்தை இழுத்தடிக்கவேயாகும் என்று சந்தேகம் எழுகின்றது.

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மாகாணசபைகளின் தேர்தலை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போட முயற்சித்த அரசாங்கம், அது முடியாமல் போனால், எவ்விதமான தேர்தல் முறைமையில் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தின் மூலம் தேர்தலை ஒத்திப்போட முயற்சிக்கின்றது என்பதை புரிந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமையானது, ஜனநாயக மறுப்பு என்றும், உரிமை மறுப்பு என்றும் கூறத் தொடங்கியுள்ளன.

மக்களின் மனோ நிலை அரசாங்கத்திற்கு சாதகமாக இல்லை என்பதால், தேர்தலை நடத்தத் தயங்கும் அரசாங்கம், நிலைமையை சரி செய்து கொண்டு தேர்தலை நடத்த விரும்பினாலும், அரசாங்கத்தின் இவ்விதமான செயற்பாடுகளும், அதன் எதிர் விளைவுகளும், மேலும் மேலும் அரசாங்கத்தின் மீதான வெறுப்பை அதிகரிப்பதாகவே அமைவதுபோல் தெரிகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg