பிரித்தானியாவுடனான வர்த்தக உறவை தொடர்ந்து பேண அமெரிக்கா ஆர்வம்
பிரித்தானியாவுடனான வர்த்தக உறவுகளை தொடர்ந்து சிறந்த முறையில் பேணுவுதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபை கூட்டத்தின் இடையே ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) பிரதமர் தெரேசா மேயை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, தெரேசா மேயின் வருகையை கௌரவிப்பதாக தெரிவித்த ட்ரம்ப், “பிரித்தானியாவுடன் பல வர்த்தகங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதனை மேலும் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த தெரேசா மே, “வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் பலமுறை விவாதித்துள்ளோம். இந்நிலையில், நாட்டிற்கும் இடையிலான வெளிநாட்டு கொள்கைகள், பாதுகாப்பு என்பன தொடர்பில் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான உறவை பேணுவது அவசியம்” என வலியுறுத்தினார்.