Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லாஸ் வேகஸ் தாக்குதலும் அமெரிக்க துப்பாக்கிக் கலாசாரமும்.

In
Updated: 10:42 GMT, Oct 5, 2017 | Published: 09:58 GMT, Oct 5, 2017 |
0 Comments
1332
This post was written by : elayathambi

லாஸ் வேகஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க துப்பாக்கி கலாசாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அமெரிக்காவின்  Gun Culture எனப்படும் இந்தத் துப்பாக்கிக் கலாசாரத்தின் வேரானது  அதன் புரட்சி கால சரித்திரத்தோடும்,  அமெரிக்க அரசியல் அமைப்போடும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அமெரிக்க அரசியல் அமைப்பானது “அமெரிக்கக் குடிமகன் ஒருவன் துப்பாக்கிகளை சொந்தமாக வைத்திருப்பதும், எடுத்துச் செல்வதும் விதி மீறல் அல்ல” என்று சொல்கிறது. இச் சட்டக் கோர்வை   இந்தத்  துப்பாக்கிக் கலாசாரத்தை  நியாயப்படுத்துவதாக அமைகிறது. அமெரிக்கர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கி சுயபாதுகாப்பு , வேட்டையாடல், இலக்கு நோக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் ஆகியவற்றில் தொடங்கி துப்பாக்கி அரசியல்  மற்றும் மாஃபியா செயற்பாடுகள் ஆகியனவரை நீள்கிறது.

லாஸ் வேகஸ் தாக்குதலே நவீன அமெரிக்காவில் நடந்த  துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்றில் அதிக எண்ணிக்கையினர் கொல்லப்பட்ட கோரச் சம்பவமாகப் பதிவாகி இருக்கிறது. இத்தத் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதை அடுத்து அதிக எண்ணிக்கையினர் உயிரிழந்தது, 2016ம் ஆண்டு ஜூன் 12ம் திகதி ப்ளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரில் Pulse nightclub என்ற இரவு விடுதியில் தனி நபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். ஐஎஸ் அமைப்பு உரிமை கோரிய இத்தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்,  மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களாக பிவருவனவற்றைக் குறிப்பிடலாம். 1999 ஏப்ரல் 20ம் தேதி கொலராடோ மாகணத்தில் உள்ள Littleton லிட்டில்டோன் நகரப்  பாடசாலை ஒன்றில்  அப்பாடசாலையின் இரண்டு  மாணவர்கள்  நடத்திய துப்பாக்கித் தாக்குதலில்  12 மாணவர்களும்  ஒரு ஆசிரியரும் பலியாகினர். இறுதியில் இவர்கள் தம்மைத் தாமே கொலை செய்து கொண்டனர்.

2007ம் ஆண்டு அமெரிக்காவின் வேர்ஜினியா மாகணத்தின் பளாக்ஸ்பர்க் நகரில் உள்ள வேர்ஜினியா தொழில் நுட்பப் பல்கலைகழகத்தில் 23 வயதான பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவன் நடத்திய தாக்குதலில்  32 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 27 மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் அடங்குகிறார்கள். தென் கொரியாவைச் சேர்ந்த துப்பாக்கிதாரி இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

2012ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கோனக்டிக்கட் மாகாணத்தில் உள்ள Sandy Hook  ஆரம்பப்ப்பள்ளியில் 6 முதல் 7 வயதான  20 மாணவக் குழந்தைகள் மற்றும்  6 பள்ளி ஆசிரியர்கள் அடங்கலாக  26 பேரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். தாக்குதலை நடத்திய 20 வயதான Adam Lanza, தாக்குதலுக்கு வர முன்னர் தன் தாயைக் வீட்டில் கொலை செய்திருந்தது குறிப்பிடத் தக்கது. தாக்குதலின் இறுதியில் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள San Bernardino நகரில் விடுமுறைதின விருந்தின்போது பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தம்பதி நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதிக எண்ணிக்கையினர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சம்பவங்களை அமெரிக்கா பல நூறாக பதிவு செய்திருக்கிறது. மறுபுறத்தில், லிங்கன் கென்னடி உட்பட நான்கு  அமெரிக்க ஜனாதிபதிகள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலாலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இந்தத் துப்பாக்கிக் கலாசாரம் தடையற்று நீள வேண்டும் என்பதை  மரபுவாதிகள் ஆதரவு அளிக்கும் அதேவேளை இதைத் தடை செய்ய வேண்டும் என்பதில் தாராளவாதிகள் போராடி வருகிறார்கள். அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உரிமையை மறுபரிசீலனை  செய்ய வேண்டும் என்ற சமூக நலக் கோரிக்கையானது, அமெரிக்க அரசியலிலும் நீதித் துறையிலும் முடிவுறாத ஒரு போராவே  நீண்ட காலமாக நிலவி வருகிறது.

குடிமக்களின் இந்த சுதந்திர ஆயுத உரிமை காக்கப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்திய டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஞாயிறன்று ஸ்டீபன் பட்டொக் என்ற ஒரு தனி மனிதனின் நரவேட்டைக்குப் பிறகு, தனது உறுதிப்பாட்டில் தளர்ந்திருப்பதாக  அமெரிக்க ஊடகங்கள் தற்போது தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் அமெரிக்கர்கள்தான்  அதிக அளவிலான  ஆயுதங்களை கொண்டிருக்கிறார்கள்.  Pew Research Center  திரட்டிய புள்ளி விபரத்தின்படி, 270 மில்லியன் துப்பாக்கிகள் சாதாரண குடிமக்களின் கைகளில் இருகிறது. அமெரிக்காவின்  42 சதவீதமான  குடும்பங்களில் ஆயுதங்கள் இருக்கின்றன. 67 சத வீதமானவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 72 சதவீதமனவர்கள் துப்பாக்கியால் சுடும் அனுபவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆண்டொன்றிற்கு அண்ணளவாக 30,000 அமெரிக்கர்கள் துப்பாக்கிச் சூட்டினால் உயிர் இழக்கிறார்கள். அமெரிக்கர்களின் தற்கொலைகளில் அரைவாசிக்கும் அதிகமான தற்கொலைகள் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வதாகவே அமைகிறது. இத்தகைய தற்கொலையைத் தான் இறுதி நேரத்தில், லாஸ் வேகஸ் ஆயுததாரி ஸ்டீபன் பட்டொக்கும்  தெரிவு செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg