எல்லா குடிமக்களும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

‘நாட்டில் கடைசி வரிசையில் நிற்கும் குடிமகனுக்கும் எல்லா பலன்களும் சென்றடைய வேண்டும். கிராமங்களில் வளர்ச்சியை கொண்டுவர வேண்டும்.’ என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் நூற்றாண்டு விழா மற்றும் சமூக சோஷியலிச தலைவர் ஜெயபிரகாஷ் அநாராயண்ணின் 115 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘எந்த ஒரு திட்டமும், அது ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கத்தில் இருந்து சற்றும் விலகாமல் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் எந்த திட்டமும் வெற்றி பெற்றுவிடும். அரசு திட்டங்களை அமல்படுத்தும் போது முடிவு சார்ந்த அணுகுமுறை வேண்டும். அதேபோல் திட்டங்களை முடிக்க கால நிர்ணயம் முக்கியம்.
அகல் விளக்கு அல்லது மண் விளக்கு போன்ற கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, நகரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தினால் கூட, அது கிராம மக்களின் நல்வாழ்வுக்கு உதவியாக இருக்கும்.
கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வசதி, தண்ணீர் விநியோகம், இணையதளத்துக்கான வசதி ஆகியவை இருந்து விட்டால் போதும். வைத்தியர்கள், ஆசிரியர்களும், அதிகாரிகளும் கிராமங்களில் பணியாற்ற தயங்க மாட்டார்கள்.
அவர்கள் நீண்ட நாட்கள் கிராமங்களில் தங்கும் போது, தானாகவே அவர்களால் கிராம மக்களுக்கு பலன் கிடைக்கும். நகரங்களில் உள்ள வசதிகள் இப்போது கிராமங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன’. என குறித்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளார்.