Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கிற்கு புதிய பிரதேச சபைகள்: பிரதமரிடம் டக்ளஸ் கோரிக்கை

In இலங்கை
Published: 05:45 GMT, Oct 26, 2017 |
0 Comments
1216
This post was written by : Varshini
Douglas_Devananda

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், உள்ளூராட்சி மன்றங்களின் தரத்தை உயர்த்த வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைத்த கடிதத்திலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறிப்பாக, மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டுச்சுட்டான் மற்றும் மடு ஆகிய பகுதிகளுக்கு பிரதேச சபைகள் இல்லாத காரணத்தால், மக்களின் அன்றாட செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதாக டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கழிவுகளை சேகரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி நகர்ப்புற பகுதிகள் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளை, கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கரைச்சி பிரதேச சபையே நிர்வகித்து வருகின்றது. எனினும், அதற்கு போதியளவு சேவையை வழங்கும் திறன் இல்லாத காரணத்தால், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மானிப்பாய், சுன்னாகம், சங்கானை மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளுக்கு நகரசபை அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வவுனியா நகரசபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அதேபோன்று கிழக்கில் திருகோணமலையை மாநகர சபையாகவும், செங்கலடி, களுவாங்சிக்குடி, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகியவற்றை நகரசபையாக மாற்றுவது தொடர்பாவும் கவனஞ்செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கோரளைப்பற்று மத்தி மற்றும் வாழைச்சேனைக்கு தனித்தனியாக பிரதேச சபைகளை நிறுவுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, போதிய நகர சபைகள் இல்லாத காரணத்தால், மக்களுக்கான சேவை வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக டக்ளஸ் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவிற்கு புதிதாக நான்கு பிரதேச சபைகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டக்ளஸ் தேவானந்தா இக் கோரிக்கை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg