மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே தொண்டமானின் பெயர் மாற்றம்! – திகாம்பரம்
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக வருடமொன்றுக்கு 20 கோடி ரூபாய் மோசடி செய்தவர்களே மக்கள் மத்தியில் கலவரங்களை தூண்டி விடுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பழனி திகாம்பரம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைச்சுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்றும், மாறாக தொண்டமானின் பெயரை நீக்க வேண்டுமென்பது தனது எண்ணம் கிடையாதென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமானது, பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமென பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பெயர்ப்பலகையில் காணப்பட்ட தொண்டமானின் பெயர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் இணைந்து ஹட்டனில் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சர் திகாம்பரம் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.
தமது அமைச்சின் மூலம் மலையகத்தில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் மக்களை தூண்டி விடுகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்வரும் தேர்தலை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு தான் அஞ்சப் போவதில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் திகாம்பரம், மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.