Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பு ஒரு நாளும் மந்திரத்தால் நிறைவேறாது

In சிறப்புக் கட்டுரைகள்
Updated: 11:11 GMT, Oct 31, 2017 | Published: 11:10 GMT, Oct 31, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : elayathambi
Constitution

புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று பௌத்த பீடத் தலைமைகளான அஸ்கிரிய பீடாதிபதியும்,மல்வத்த பீடாதிபதியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம்கண்டுவிட்டது.

“விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போல் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு மீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் ஆரம்பித்துள்ளது. இதேவேளை புதிய அரசியலமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தலை மக்களுக்கு வழங்கவும், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி கலந்துரையாடவும், சர்வ மதத் தலைமைகளையும் கூட்டி கலந்துரையாடப் போவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜே.வி.பியினர் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதிய அரசியலமைப்பை பரிசீலிக்கத் தவறுவோமானால் சமஸ்டி அடிப்படையில் அமைந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி முழுமையாக அமுல்படுத்தும் நிலையை நாம் எதிர்கொள்ள நேரிடுவோம் என்று கூறியிருக்கின்றார்கள்.

முஸ்லிம் கட்சிகள் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பதுபோல் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் சூழல் அமையப்பெறுமானால், அதன் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நிலைமை ஏற்படும் என்பதால் புதிய அரசியலமைப்பையே தாம் ஆதரிப்பதென்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பை இந்த நாட்டில் நிறைவேற்றுவது என்பது முடியாத காரியமாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் தத்தமது அரசியல் நலன்களுக்காக தாமும் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பதுபோல் பாசாங்கு காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் கௌரவமான தீர்வொன்று புதிய அரசியலமைப்பு வரைபில் பரிந்துரைக்கப்படவில்லை என்பதை உணர்ந்திருந்தபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த பங்காளிக் கட்சிகள் வெளிப்படையாக புதிய அரசியலமைப்பை விமர்சிக்கவில்லை.

புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பான வழி நடத்தல் குழுவில் தாமும் தனியொரு கட்சியாக உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றும், அதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக பங்கு கொண்டுள்ள சம்பந்தரும், சுமந்திரனும் கூட்டமைப்புக்குள்ளே கலந்துரையாடல்களை நடத்தாமல், சுயமாகவே முடிவுகளை எடுக்கின்றனர். ஆகவே புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கியிருக்கும் குறைபாடுகளுக்கும், ஏற்க முடியாதவைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிவந்த ஏனைய தமிழ் கட்சிகள் இப்போதுவரை புதிய அரசியலமைப்புத் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்கவில்லை.

அரசாங்கம் வெளிப்படையாக புதிய அரசியலமைப்பு தேவை என்பது தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், அரசின் கருத்துருவாக்கிகளாகவும், நம்பிக்கைக்குரிய ஆலோசனையாளர்களாகவும் இருக்கும் சிலர் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட்டவர்களின் நிலைப்பாடானது, தமிழ் மக்களுக்கு அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தீர்வொன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்படுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை.

அவர்களைப் பொருத்தவரை தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை வழங்கும் அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை வற்புறுத்தும் அழுத்த சக்தி இப்போது தமிழ் மக்களிடம் இல்லை. எனவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்காக அரசாங்கம் சிந்தித்து காலத்தை வீணடித்துக்கொள்ளத் தேவையில்லை. சர்வதேச சமூகத்தை சமாளிப்பதற்காக இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை வழங்க அரசாங்கம் முயற்சிப்பதுபோல் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும்.

தமிழ் மக்கள் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தமது அழுத்த சக்தியை இழந்துவிட்டார்கள் என்பதை ஆட்சியாளர்களும், சிங்கள இனவாதிகளும் தமக்கு வாய்ப்பாகவே கருதுகின்றார்கள். இந்தக் கருத்தானது, தமிழர் தரப்பில் பலமான ஆயுத சக்தியை இழந்துவிட்டார்கள். தமிழ் மக்கள் தரப்பில் இருக்கும் எந்தவொரு அரசியல் தரப்பும் அரசுக்கு அழுத்தமொன்றைக் கொடுக்கக்கூடியதாக இருக்கவில்லை என்ற புரிதலைக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் நாட்டின் எதிர்க்கட்சித் தலைமையாக இருக்க முடிகின்றது, படைத்துறையில் தலைமையாக இருக்கமுடிகின்றது என்ற நிலையில் நாட்டிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இல்லாத வேறு விஷேட பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு என்ன இருக்க முடியும்? என்று சிங்கள புத்திஜீவிகள் சிறுபிள்ளைகளைப்போல் கேட்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் குறித்து தென் இலங்கையின் மதிப்பீடுகள் இருக்கையில் தமிழ் மக்களோ, கடன் சுமைகளிலும், வாள்வெட்டுக் கலாசாரத்திலும், சமூகப் புறக்கணிப்புக்களிலும் புதைந்துபோய்க்கொண்டு இருக்கின்றனர். தமிழர்களின் எந்தவொரு கோரிக்கைகளுக்கும் நல்லாட்சி அரசாங்கம் தீர்வெதையும் வழங்கவில்லை. கண்துடைப்புக்காக அவ்வப்போது சில காரியங்களை செய்தபோதும், அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள், முன்னாள் இயக்கப் போராளிகளின் எதிர்காலம், பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் பாதுகாப்பும், பொருளாதார மேம்பாடும், இவற்றுக்கும் மேலாக நிரந்தரமான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் இன்னும் கிடப்பிலேயே கிடக்கின்றன.

யதார்த்தம் இதுவாக இருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பாணத்திற்கு வருவதும், எளிமையாக நடப்பதாகக் காட்டிக்கொள்வதும் தமிழ்மக்களை திருப்தியடையச் செய்யாது.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருப்பதானது, காலத்தை இழுத்தடிப்புச் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாத்திரமல்ல, அதற்கு வெளியிலும் பிரச்சினையோடு தொடர்புபட்ட தமிழ்த் தரப்புகளும், ஏனைய இனங்களின் அபிலாஷைகளும் இருக்கவே செய்கின்றன என்பதை மிகத் தாமதமாகவே அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதா? என்று கேட்கத் தோன்றுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்தவர்களும்; இலங்கை நாட்டின் வரலாறு தெரியாதவர்களோ, இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியையும், நம்பிக்கையீனத்தையும் தெரியாதவர்களோ இல்லை.

ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஒன்றுக்காக முயற்சிக்கும்போது சர்வ கட்சிகளுடன் உரையாற்றுவது, மக்களுக்கு தெளிவு படுத்துவது, அபிப்பிராயங்களைத் திரட்டுவது போன்ற அடிப்படை விடயங்களை கையாண்டிருக்க வேண்டும். இந்த நல்லாட்சியாளர்கள் மந்திரத்தில் மாயா ஜாலங்களை நிகழ்த்திவிட முடியும் என்று செயற்பட்டார்கள். ஒருவேளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததோடு, மகிந்த ராஜபக்சவை தமது தேசத் தந்தையாகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த மகாவீரனாகவும் சிங்கள மக்கள் கொண்டாடிய அந்த நேரத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வை வழங்கவேண்டும் என்று 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியோ, புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தியோ இருப்பாராக இருந்திருந்தால் அவரின் அந்த முடிவை சிங்கள மக்கள் அன்று எதிர்த்திருக்கமாட்டார்கள்.

மகிந்த எடுக்கும் எந்தவொரு முடிவும், நாட்டைப் பிரிக்காத, அனைத்து இலங்கையரும் சமத்துவ உரிமைகளுடன் வாழும் தீர்வாகவே இருக்கும் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் மகிந்த அதைச் செய்யவில்லை. மகிந்த போர்க்கோலத்தை விரும்பியவராகவும், தேசிய இனப்பிரச்சினை என்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது தூர்ந்துபோய்விடும் என்றும் நம்பினார்.

மகிந்தவுக்கு கிடைத்ததைப்போல் ஒரு சந்தர்ப்பம் இனி ஒருபோதும் எவருக்கும் கிடைக்கப்போவதில்லை.

அதற்கு முன்னர் சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்தபோது மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றப்போவதாக புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்தார். அதற்கான கள நிலவரத்தை ஏற்படுத்துவதற்காக, அனைத்துக்கட்சிக் கூட்டங்களை நடத்தினார், மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக “சுது நெலும்” அதாவது வெண் தாமரை எனும் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்திருந்தார்.

அந்த வேலைத்திட்டம் வெற்றியளித்தது. நாட்டுமக்கள் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆவலோடு தீர்வை எதிர்பார்த்திருந்திருந்தனர். அன்று எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி, அதை எதிர்த்து பாத யாத்திரை சென்றது. நாடாளுமன்றத்தில் அந்த அரசியலமைப்பு வரைபை கிழித்து எரியூட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளுக்கு அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவாக செயற்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அவ்வாறு செயற்பட்டதற்கு விடுதலைப் புலிகளின் அழுத்தமும் காரணமாக அமைந்திருந்தது. விடுதலைப்புலிகள் தனி நாடு ஒன்றையே விரும்பினார்கள். நாடாளுமன்றம் ஊடாக கிடைக்கப்பெறும் புதிய அரசியலமைப்பு தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை என்பதை நாம் மறுத்து கருத்துக் கூறமுடியாது.

தற்போதைய நிலையில் ஆயுத ஆழுத்த சக்தியை இழந்திருந்தாலும் கௌரவமான தீர்வொன்று தேவை என்பதை வலியுறுத்தும் மனோ சக்தியை இழந்துவிடவில்லை. இன்றுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இணக்க அரசியல் வழிமுறையை தேர்ந்தெடுத்திருப்பதை தமிழ் மக்களின் இயலாமையாக சிங்கள இனவாதப் பிசாசு கருதுமாக இருந்தால் அதற்கான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும்.

சிங்கள இனவாதபிசாசு எஞ்சியிருக்கும் தமிழ் மக்களை ஏளனமாகப் பார்ப்பதற்குக் காரணம், தமிழ் மக்கள் பொருளாதார பலம் இல்லாத ஒரு இனக்குழுமமாக இருப்பதுமாகும். ஆயுத பலத்தை இழந்துள்ள ஒரு இனம், பொருளாதாரப் பலத்தோடு தலை நிமிர்த்தி மன வலிமையோடு எழுந்து நிற்க வேண்டும்.

தாயகத்தில் தமிழ் மக்கள் பொருளாதார மன வலிமையோடு எழுந்து நிற்பதற்கும், சிங்கள இனவாத பிசாசுகளுக்கு அழுத்த சக்தியாகத் தெரிவதற்கும், புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகள் தமக்கிடையேயான பேதங்களை கைவிட்டு ஒன்றுபட்டு பொருளாதார ரீதியாக பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும்.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg