Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் அறிவிப்பு: புதிய அரசியலமைப்பு விவாதத்தை விழுங்கிவிட்டது!

In சிறப்புக் கட்டுரைகள்
Published: 14:00 GMT, Nov 3, 2017 |
0 Comments
1362
icon_com
This post was written by : Vithushagan
1-1200x550 (1)

புதிய அரசியலமைப்பு இடைக்கால வரைபு தொடர்பான விவாதங்கள் நான்கு நாட்களாக நடந்து முடிந்துள்ளது. அந்த விவாதத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை முன்வைப்பதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே அதிக அக்கறையைக் காட்டியிருந்தார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்றுவதற்கு நேரத்தை ஒதுக்கிக்கொடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அசமந்தப்போக்கோடு நடந்து கொண்டார் என்றும், வன்னி மக்கள் சார்பாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் உரிமையை சம்பந்தன் புறக்கணித்துவிட்டார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை எதிர்த்து சிவசக்தி ஆனந்தன் உரையாற்றவுள்ளார் என்று கூறியே தனக்கான நேரத்தை ஒதுக்க சம்பந்தன் மறுத்துவிட்டதாக சிவசக்தி ஆனந்தன் சம்பந்தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

இந்த நிலையில் தமிழ் மொழியை அரச கரும மொழியாக அரசியல் யாப்பில் ஏற்றுக்கொண்டுள்ளபோதும், 13ஆவது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பாக யாப்பில் ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அவற்றை இந்த நாட்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஒற்றையாட்சியை ‘ஒருமித்த நாடு’ என்று குறிப்பிட்டு யாரை ஏமாற்றப்பார்க்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளநாட்டில் தீர்வு காணப்படாவிட்டால் சர்வதேச சமூகம் களத்தில் குதிக்கும் என்று சம்பந்தன் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அதேநேரம், கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில், இரு பிரதான கட்சிகளும், கூட்டமைப்பும் இணங்கியுள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.

அது சாத்தியமாகாவிட்டால் மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடச்செய்யும் சூழலையே எதிர்கொள்ள நேரிடும் என்றும் மீண்டும் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள போராடும் நிலைமை ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அமைச்சர் மனோகணேசன் தனது உரையில், இந்த அரசாங்கத்துடன் எல்லாவகையான விட்டுக்கொடுப்புக்கும் உடன்பட்டு சம்பந்தன் செயற்படும் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவேண்டும். அவ்வாறு இல்லாமல் சம்பந்தனை வெறுங்கையோடு வடக்கிற்கு அனுப்பி வைக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை மேலும் ஒருநாள் அதிகரித்து நான்கு நாட்கள் நடத்தி அனைவருக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் ஈடுபாடு காட்டியதை வரவேற்கலாம்.

ஆனாலும் அந்த விவாதங்கள் நிறைவுக்கு வந்த கையோடு உள்ளுராட்சி அமைச்சரால் கையொப்பம் இட்டு நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான சட்டவரைபும், அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களுமே முதன்மை பேசுபொருளாகியுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான எதிர்கால விவாதங்களும், அதை நிறைவேற்றும் முயற்சிகளும் 2018ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னரே கவனத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்pரமசிங்க அறிவித்துள்ளார்.

எனவே புதிய அரசியலமைப்புத் தொடர்பான பேச்சுக்கள் இன்னும் ஆறு மாதத்துக்கு நாடாளுமன்றத்தில் பேசப்படப்போவதில்லை. இதற்கிடையே புதிய அரசியலமைப்புத் தொடர்பாக சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டப்போவதாகவும், சர்வ மதத்தலைவர்களைக் கூட்டி ஆராயப்போவதாகவும் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால அந்தக் காரியங்களை முன்னெடுக்கலாம்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுக்களை டிசம்பர் மாதம் 11ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளப்போவதாகவும், தேர்தலை 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கும், 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட அதுவும் விடுமுறை நாள் இல்லாத ஒரு நாளில் நடத்தப்போவதாகவும் தேர்தல் ஆணையாளர் திட்டவட்டமாக அறித்துள்ள பின்னணியில் ஜனாதிபதி தனது கட்சியின் தேர்தல் பணிகள் மற்றும் கட்சியின் போட்டியிடும் தந்திரோபாயங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடுவாரா? புதிய அரசியலமைப்புத் தொடர்பான கவனம் செலுத்துவாரா? என்பதெல்லாம் கேள்விக்குரிய விடயங்கள்தான்.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்கள் சம்பிரதாய பூர்வமாகவே நான்கு நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. அவை விவாதங்களும் இல்லை வெறுமெனவே கருத்துப் பதிவுகள். ஆறு மாதத்துக்கு இந்த விடயத்தை தூக்கிப் போடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு தந்திரோபாய செயற்பாடாகவே இதைக் கருதலாம்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. கட்சிகள் தாம் தனித்துப்போட்டியிடுவதா? கூட்டமைத்துப்போட்டியிடுவதா? வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற ஆலோசனைகளை நடத்திக்கொண்டும், வெற்றி வாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதில் மந்திர ஆலோசனைகளை நடத்திக்கொண்டும் இருக்கின்றார்கள்.

புதிய உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு சபையிலும் மொத்த உறுப்பினர்களில் 30 சதவிகிதம் பெண்களும் இருப்பது சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனேகமான கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் திரட்டுவதில் தலையை பிய்த்துக்கொண்டு இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

வட்டார முறையில் தெரிவு செய்யப்படுவது 60 விகிதமாகவும், விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவது 40 விகிதமாகவும் அமையுமென்பதால், கட்சிகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தவுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில் கூடிய கவனம் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் வேட்பு மனுவில் குறிப்பிடப்படும் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1500ரூபா கட்ட வேண்டிய அதேநேரம் சுயேட்சைக்குழுக்கள் 5000 ரூபாய் கட்ட வேண்டும் என்ற வரையறை இருப்பதால் பெரும்பாலும் சுயேட்சைக் குழுக்கள் முன்னரைப்போல் ஏட்டிக்குப் போட்டியாக களத்தில் இறங்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வட்டார முறையும், தொகுதிவாரி முறையும் புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படுவதே விருப்பு வாக்கு முறையின் போது ஒரே கட்சிக்குள் வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தவிர்க்கவும், ஒரு வேட்பாளர் மாவட்டம் அல்லது பிரதேசம் முழுவதுமாகச் சென்று முறைகேடுகளில் ஈடுபட்டு தனது வெற்றிக்காக ஏற்படுத்தும் குழப்பங்களைத் தவிர்க்கவுமே என்பதால் தனித்துப் போட்டியிடுவதிலும், கூட்டமைத்துப் போட்டியிடுவதிலும் கட்சிகள் நிதானமாக செயற்பட வேண்டியிருக்கும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பு விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான புதிய சட்டம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பாக கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் போதுமான தெளிவு இல்லை என்பதால், தாமும் தெளிவாகிக் கொண்டு, மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடும் பிரயத்தனத்தில் அரசியல் இருக்கின்றன.

-ஈழத்துக்கதிரவன் -

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg