கைதிகள் விடயத்தில் நம்ப நடப்போம் ஆனாலும் நம்பமாட்டோம்: சிவாஜிலிங்கம்
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி அநுராதபுர மேல்நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் குறித்த வழக்கை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என்ற உறுதிப்பாட்டை அரசியல் கைதிகளிடம் வழங்கியதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் 40 ஆவது நாளாக தொடர்ந்த நிலையில் கைதிகளை சந்திக்க யாழ்பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் அங்கு சென்றிருந்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் கைதிகளின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு ஒன்று யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
இந்த ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் இந்த கருத்தை தெரிவித்ததுடன், அவ்வாறு ஐந்தாம் திகதிக்கு முன்னர் வழக்கு வவுனியாவுக்கு மாற்றவில்லை என்றால் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நம்ப நட நம்பி நடவாதே என்பதற்கிணங்க ஜனாதிபதி, வடமாகாண ஆளுனர் உள்ளிட்ட அரசாங்கத்தை நம்பி தற்போது அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஜனாதிபதி கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும், இலங்கை ஐ.நாவிற்கு பயங்கரவாத தடைசட்டத்தை வாபஸ் பெறுவதாக அளித்தவாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியல் கைதிகளான சுலக்ஷன், திருவருள், தர்ஷன் ஆகியோர் தமது வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு விடுத்த கோரிக்கையே அரசியல் கைதிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட ஒரு பாரிய திருப்புமுனை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.